Home » உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்தாலே தீர்ப்பு முழுமையடையும்: அருட்தந்தை மா.சத்திவேல்

உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்தாலே தீர்ப்பு முழுமையடையும்: அருட்தந்தை மா.சத்திவேல்

Source

சட்டத்தை மீறியமைக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே தீர்ப்பு முழுமையடையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று(17.01.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது அதிகாரத்தை பயன்படுத்தி கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சட்டத்திற்கு முரணான வகையில் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை இரத்து செய்து குற்றவாளிக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கை வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அடையாளப்படுத்தப்படும்.

குறுகிய அரசியல் காரணங்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்த முன்னாள் ஜனாதிபதியும் அதற்கு துணை நின்றவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உரிய தண்டனை தீர்ப்பளிக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதிகள் கட்சி அரசியலை பலப்படுத்துவதற்காகவும், குடும்ப அரசியலை நிலைப்படுத்துவதற்காகவும், அரச சொத்துக்களையும், வளங்களையும் தமக்கும், தம்முடையவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும் அதிகாரத்தை ஊழல் நிறைந்ததாக்கி சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டுள்ளனர் என்பது மக்கள் அறிந்த உண்மை. அத்துடன் சட்டத்தை மீறுவதற்கும் ஊழலில் ஈடுபடுவதற்கும் இடமளித்து தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டுள்ளனர்.

2019 – 2022 ஆம் ஆண்டில் முறையற்ற பொருளாதார கொள்கை வகுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர் என்பதை கடந்த வருடம் நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தியது. அந்த தீர்ப்பு மக்கள் தீர்ப்பாகும் நிலையிலேயே தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ளது. இது கோட்டாபய மற்றும் அவரின் சகாக்களின் இன்னொரு முகத்தை சுட்டி நிற்கின்றது.

தூக்குத்தண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு கொடுக்கும் அளவிற்கு சட்டத்தை மீறி செயல்படுவதற்கு முன்னால் ஜனாதிபதிக்கு எங்கிருந்து துணிவு வந்தது? இவ்வாறான ஒரு முடிவெடுப்பதற்கு காரணம் அவரது குடும்பமா? அல்லது அவருக்குத் துணை நின்ற அரசியல் கட்சியா? அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களா? இல்லை எனில் வேறு ஒரு அழுத்த சக்தியா என்பது கண்டறியப்படலும் வேண்டும். அந்த அளவுக்கு துமிந்த சில்வா யாருக்கு? எந்த சக்திக்கு? தேவையான ஒருவராக இருந்தார்? என்பதும் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

இத்தகைய பின்னணியில் “கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை மீறி பொதுமன்னிப்பு வழங்கினார்”என உச்ச மன்றம் தீர்ப்பு வழங்கும் வகையில் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன் நின்ற சட்டத்தரணிகள் பாராட்டப்பட வேண்டியவர்களே.

இந்த தீர்ப்போடு அவர்களின் கடமை முடிந்துவிடவில்லை என்பதையும் கூறுவதோடு சட்டத்தை மீறியமைக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே தீர்ப்பு முழுமையடையும்.

இது ஏனைய ஜனாதிபதிகளுக்கும் சட்டம் தொடர்பிலும், சட்டத்தரணிகள் தொடர்பிலும் அச்சத்தை ஏற்படுத்தும். நல்லாட்சி தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்.

மிருசுவில் சமூகப் படுகொலையோடு தொடர்புபட்டு மரண கைதியாகி தண்டனை கைதியாக சிறையில் இருந்த ஆழ ஊடுருவும் படையணியை சேர்ந்த சுனில் ரத்நாயக்க 2020 ஆம் ஆண்டு இதே ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.இது நீதிமன்றத்தையும், சட்டத்தையும், சமூக நீதியையும் அவமதிக்கும் செயலாகும். இது இனம் சார்ந்து, இராணுவம் சார்ந்து எடுத்த முடிவாகும்.

இத்தகைய சமூக படுகொலையாளி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமையை இனவாத சமூகம் அங்கீகரித்து.இதன் மூலம் கோட்டாபயவின் தமிழர்களுக்கு எதிரான கோரமுகமும் சட்டத்தை அவமதிக்கும் அகோரமும் வெளிப்பட்டது.

நாடு முழுவதும் 24ற்கும் அதிகமான சமூக புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நீதி கிடைக்காமைக்கும் அதிகார தரப்பும் அதிகாரமே காரணமாகும். இத்தகைய அதிகாரம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாபக்கேடு என்பதை தற்போது மக்கள் உணர்வார்கள்.

ஜனநாயக நாட்டில் நீதித்துறை, நாடாளுமன்றம், நிறைவேற்ற துறை என்பன சுயாதீனமாக இயங்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு.துமிந்த சில்வா தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அன்றைய நீதிமன்றத் துறையும் சுயமாக இயங்கவில்லையோ? எனக் கேள்வியை கேட்க தூண்டி உள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும், நாட்டை பொருளாதார நிலையில் படுபாதாளத்திற்கு இட்டு சென்றவர்களுக்கும் மக்கள் நீதிமன்றமான தேர்தல் மூலம் தம்முடைய தீர்ப்பை வழங்க வேண்டும்.

தேர்தல் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், ஊழலுக்கும் உட் படாதிருந்தால் மட்டுமே அது நிகழும். நீதிமன்ற தீர்ப்பு மக்களை விழிப்படைய செய்யும் என்று எதிர்பார்ப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image