Home » உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ராஜபக்சக்களின் திட்டமே என்கிறது செனல் 4, இலங்கை என்ன சொல்கிறது? 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ராஜபக்சக்களின் திட்டமே என்கிறது செனல் 4, இலங்கை என்ன சொல்கிறது? 

Source

பிரித்தானிய ஒளிபரப்பு நிறுவனமான செனல் 4 இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடபில் கடந்த செவ்வாய்க்கிழமை (5) இரவு வெளியிட்ட ஆவணப்படம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் எழுப்பியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு ராஜபக்ச குடும்பத்தினரே நேரடியாக பொறுப்பு என அந்த ஆவணப்படம் குற்றஞ்சாட்டுகிறது.

எனினும் இந்த ஆவணப் படம் தொடர்பில், இலங்கை அரசிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 
அந்த தாக்குதல் தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற விசேட குழு ஒன்றிடம் சமர்ப்பிக்கப்படுமென,  தொழில மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் கூறினார். “சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்பட்டால் அதற்கான அனுசரணையளிப்பது குறித்தும் அமைச்சரவை விவாதித்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான பந்துல குணவர்தன அமைச்சரவையில் இதுத் தொடர்பில் விவாதிக்கபப்டவில்லை என ஊடக சந்திப்பில் தெரிவித்தார். “அமைச்சரவை இதை நேற்று (5) விவாதிக்கவில்லை, ஆனால் உறுப்பினர் ஒருவர் இதுத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்”. 

பாதுகாப்புதுறை இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ’ஒரு குழுவை நியமிக்க’ ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடைபெறும காலத்தை அண்மித்து செனல் 4 இவ்வாறான கானொளிகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக, அரசாங்கத் தரப்பின் அமைச்சர்கள் அனைவரும் ஒரே குரலில் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

இந்த நிலையில், குறித்த காணொளியில் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சரும், பிள்ளையான் என அழைக்கப்படுபவருமான, சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“2015 – 2020 வரை சிறையில் இருந்த என்னால் இதனை எப்படி செய்ய முடியும்? இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கும் என் மீது பலி போடுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.”

“மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமானம் செய்த பலர் இன்று சிறைகளிலும், வெளியேயும் இருக்கின்றார்கள். அதேபோல் இவர்கள் மதத்தின் பெயராலும், மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மத நிறுவனங்கள் இருக்கின்றன. இதன் பின்னால் சில அரசியல் சக்திகளும் சர்வதேச சக்திகளும் இருக்கின்றன. இதை காப்பாற்றுவதற்காக அசாத் மௌலானா எடுக்கின்ற முயற்சியா இது?” என அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆவணப்படம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். சர்வதேச  ஊடகங்கள் சர்வதேச விசாரணை ஒன்று தேவை எனக் கோருவது தொடர்பில், நாடு அவமானப்பட வேண்டும் என நாடாளுமன்ற விவாதத்தின்போது அவர் சுட்டிக்காட்டினார். 

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து அரசு வெட்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக அரசு இதை வெளியிட்டிருக்க வேண்டும். எனவே, செனல் 4 வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சர்வதேச மட்டத்திலான விசாரணை ஒன்று தேவை” 

அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு கத்தோகிக்க திருச்சபையும் இத்தாக்குதல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை கோரியுள்ளது. பேராயர் மல்கம் ரஞ்சித் இந்த ஆவணப்படம் வெளியானதை அடுத்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், “அறிக்கை ஒன்றை மாத்திரம் தயாரிப்பது என்ற நோக்கத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டால் அதன் மூலம் காத்திரமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த முடிவுகள் ஏதும் வராது” எனக் கூறியுள்ளார். 

சுயாதீன விசாரணைக் குழுவொன்றின் மூலமே அந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பேராயர் வலியுறுத்துகிறார்.

“சுயாதீனமான, பாரபட்சமற்ற, நீதியான, வெளிப்படைத்தன்மையுடன் கூட பரந்துபட்ட விசாரணை ஒன்றறு இடம்பெற வேண்டும்.  மிகவும் துக்ககரமான அந்த நிகழ்வு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த சதித்திட்டம் பற்றி அனைத்து உண்மைகளும் ஆராயப்பட்டு, அதில் கூறப்பட்டிருக்கும் நபர்கள் குறித்து அதிலும் குறிப்பாக, இடம்பெற்ற கூட்டு படுகொலைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் பேராயர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. எப்படியான விசாரணை இடம்பெற்றாலும், பொலிஸாரும் புலனாய்வு அதிகாரிகளும் தம்மிடமுள்ள சாட்சியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமென பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பிலான தனது புலனாய்வு தொடரான ‘டிஸ்பாட்சஸ்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பான அந்த ஆவணப்படத்தில், இந்த தாக்குதல்கள் தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர நடத்திய தாக்குதலாகும் என கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற துணை இராணுவ குழுவின் முன்னாள் பேச்சாளரான ஹச்னீர் அசாத மௌலானாவின் வாக்குமூல ஆதாரத்தின் அடிப்படையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

“குற்றவாளிகள் யார், அதை யாரின் உத்தரவின் பேரில் யார் ஏற்பாடு செய்தார்கள் என்ற உண்மை எனக்குத் தெரியும்” என அசாத் மௌலானா அந்த ஆவணப்படத்தில் நேர்முகமாக கூறியுள்ளார்.

அந்த தாக்குதல்கள் முழுவதும் கோட்டாபயவின் நேரடி உத்தரவுகளை அடுத்து, அரசின் புலனாய்வு சேவையின்  தலைவராக இருந்தா சுரேஷ் சலே மூலம் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரம் காணப்படுவதாக அந்த ஆவணப்படம் மேலும் கூறுகிறது.

அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் பென் டெ பியர் சமூக ஊடகத்தின் மூலம், “ஒரு குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர 269 பேர் படுகொலை செய்யப்பட்டார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மேஜர் ஜெனரல் சலே மறுத்துள்ளார்.

தமக்கு தகவல்களை அளித்த அசாத் மௌலானாவும் அவரது தலைவருமான தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானும் கோட்டாபய ராஜபக்ச கூட்டிய கூட்டம் ஒன்றில் இருந்தனர், அந்த கூட்டத்தில் “ட்ரிபோலி ப்ளட்டூன்” என்ற கொலைக்குழுவை துணை இராணுவப்படை மூலம் அமைக்கவும் கூறினார் என செனல் 4 ஆவணப்படம் குறிப்பிட்டுள்ளது. 

“அந்த டிரிபோலி ப்ளட்டூன் கோட்டாபயவின் நேரடி கட்டளையின் கீழ் செயற்பட்டது” என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர். அது ஒளிப்பதிவாக அந்த ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது.

கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையான் தன்னை அழைத்து சிறைக்கு வந்து தன்னுடன் இருக்கும் சில முஸ்லிம் தீவிரவாதிகளை சந்திக்கும்படி கூறியதாகவும் மௌலானா மேலும் கூறுகிறார். அங்கு சென்ற போது, உயிர்த் ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சஹ்ரானின் சகோதரர் சைனி மௌலவியை சந்தித்ததாகவும் தெரிவித்த சாத் மௌலானா, பின்னர் அவர்களை சிறையிலிருந்து பிணையில் விடுவிக்க ஏற்பாடுகளை செய்ததாகவும் அந்த ஆவணப்படம் கூறுகிறது.

“கடந்த 2018இல் அந்த நபர்கள் மற்றும் சுரேஷ் சலேயுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி பிள்ளையான் என்னிடம் கூறினார்” என அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய அந்த நபர்களுக்கும் சுரேஷ் சலேவிற்கும் இடையே ஒரு கூட்டத்தை தான் ஏற்பாடு செய்ததாகவும், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க அவர் உதவியதாகவும் மௌலான ஐ நா விசாரணையாளர்களிடம் கூறியதாக செனல் 4 இன் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தான் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அந்த குழுவை அங்கு வருமாறு கூறியதாக தெரிவிக்கும் மௌலானா,  ஆதலால் “எனக்கு அனைத்தும் தெரியும்” என்கிறார். மௌலானா தனது வாக்குமூலத்தில் அந்த கூட்டத்திற்கு சைனி மௌலவி தனது சகோதரர் சஹ்ரான் மற்றும் இதர நால்வருடன் வந்தார், ”அவர்களை நான் சுரேஷ் சலேவிற்கு அறிமுகப்படுத்தினேன்” எனக் கூறியுள்ளார்.

ஐ.நா விசாரணையாளர்களிடம் பேசிய மௌலானா, அந்த கூட்டம் மூன்றி மணி நேரம் இடம்பெற்றது எனவும், தன்னை வெளியே இருக்குமாறு கூறினார்கள் எனவும், கூறியதாக அந்த ஆவணப்படம் கூறுகிறது.

“அந்த கூட்டம் முடிவடைந்தவுடன், சுரேஷ் சலே என்னிடம், ராஜபக்சக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பாற்ற ஒரு சூழல் தேவைப்படுகிறது. அது ஒன்றே கோட்டாபய ஜனாதிபதியாவதற்கான வழி. இதுவே அந்த தீவிரவாதிகளுக்கும் சுரேஷ் சலேவிற்கும் இடையே நடைபெற்ற கூட்டம்” என அவர் அந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.

இதனையும் தாண்டி, அடையாளம் காணப்படாத உயர்மட்ட அரச அதிகாரி ஒருவரும் அந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளார். “கோட்டாபய சுரேஷ் சலேயை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன் காரணமாகவே அவரால் விரைவாக பதவி உயர்வுகளை பெற முடிந்தது. இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு அவரையே அதிகம் குற்றச்சாட்ட வேண்டும்” என அந்த அதிகாரி கூறுகிறார்.

”குற்ற விசாரணைப் பிரிவு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை நிச்சயம் கண்டறிந்திருப்பார்கள்” என பெயரிடப்படாமலும், அடையாளம் காணப்படாமலும் இருக்கும் அந்த அதிகாரி செனல் 4 ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதல்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ச வெளியிடவே இல்லை. ஆனால், அந்த அறிக்கையை தாங்கள் பார்த்துள்ளதாக கூறும் செனல் 4, முக்கிய குண்டுதாரியை தாக்குதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே புலனாய்வு பிரிவினர் அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ளது. 

இந்த ஆவணப்படத்தில் குற்ற விசாரணைப் பிரிவு பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த சில்வாவும் பேசியுள்ளார்.  ராஜபக்ச ஆட்சியில், நாட்டின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்து வந்தார், எனினும் கோட்டாபய ராஜபக்சவை குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுத்த காரணத்தால் ஏற்பட்ட “ உயிர் அச்சுறுத்தல்” காரணமாக அவர் தற்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். 

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமசிங்கவின் படுகொலை பற்றிய விசாரணை தொடர்பிலேயே நிஷாந்த சில்வா கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்திருந்தார். 

லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை, இந்த ஆவணப்படம் தொடர்பில் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் திடுக்கிடும் வகையில் உள்ளதாக கூறியுள்ளது. 

“டிஸ்பாட்சஸ் விசாரணை தொடரின் புதிய ஆவணப்படமான-இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள்-சாட்சியம் அளித்தவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாரிய புதிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த குற்றசாட்டுகள் திடுக்கிடும் வகையில் இருந்தாலும், அவை நேரடியாகவே உள்ளன: அதாவது ராஜபக்சக்களின் சகாக்கள் தேசிய தௌஹீத் ஜமாத்துடன் நேரடியாக தொடர்பில் இருந்தனர், மேலும், அவர்கள் அந்த குண்டு வெடிப்புகளுக்கு முன்னர் அந்த அமைப்பின் தலைவர்களை பொலிசார் கைது செய்வதற்கு தடையாக இருந்தனர் அல்லது படுகொலைகளுக்கு பிறகு முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முட்டுக்கட்டை போட்டனர்” என்கிறது கார்டியன் விமர்சனம்.

இந்த ஆவணப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் பென் டெ பியர் இதற்கு முன்னர் செனல் 4 தொலைக்காட்சியில், கெலம் மெரேயின் நோ ஃபயர் சோன்: இலங்கையில் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் வெளியான போது அதன் இயக்குநராக இருந்தவர். அந்த ஆவணப்படத்தில் 2009இல் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. 

அந்த கண்டுபிடிப்புகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என 2011ஆம் ஆண்டி இடம்பெற்ற ஐ.நா விசாரணை ஒன்று கண்டறிந்தது.

செனல் 4 ஆவணப்படமான நோ ஃபயர் சோனில் காட்டப்பட்ட  கணொளிக்  காட்சிகளில் கைதிகள் நிர்வாணமாக, கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது உண்மையா என்பதை கண்டறிய இலங்கை அரசால் 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  பரணகம ஆணைக்குழு அது து உண்மையே எனக் கண்டறிந்தது. 

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image