இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர் கட்டங்களாக ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயந்திஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் சேவைகளை அளவிலும் தரத்திலும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை பல கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று (14) பேராதனை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆய்வகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சுகாதார சேவை பல்வேறு சவால்கள் மற்றும் சிரமங்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அவற்றை குறைப்பதற்காக தேவையான பணியாளர்களை நியமிப்பதும், தேவையான வசதிகளை வழங்குவதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளதாக அவர் கூறினார்.
மேலும், நியமிக்கப்படவுள்ள 13,600 பேரில் 50 சதவீதத்தினரை இந்த ஆண்டுக்குள்ளேயே ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, முன்மொழியப்பட்ட தாதியர் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் பயிற்சி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தாதியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஊடாக சுகாதாரத் துறைக்குத் தேவையான தாதியர்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, இந்த ஆண்டில் மட்டும் தாதியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிக்காக 3,000 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் சேர்க்கை நடவடிக்கைகள் நிறைவடைந்து பயிற்சி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
The post அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம் appeared first on LNW Tamil.