கஸகஸ்தானில் இலங்கை தூதரகத்தை நிறுவ நடவடிக்கை
கஸகஸ்தானின் அஸ்தானாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் கஸகஸ்தானின் அஸ்தானாவில் இலங்கை தூதரகத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாடு (CICA) கஸகஸ்தானில் நிறுவப்பட்டதாலும், இலங்கை மாநாட்டில் அங்கத்துவம் பெற்றதாலும் மத்திய ஆசிய பிராந்தியத்துடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கைக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதால், அஸ்தானாவில் இலங்கை தூதரகத்தை நிறுவுவது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உதவும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கஸகஸ்தானின் அஸ்தானாவில் உத்தேச இலங்கைத் தூதரகத்தை நிறுவுவதற்கு வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.