குஜராத்தில் அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுரகுமார விஜயம்!
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அமுல் பால் உற்பத்தி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தேசிய பால்வள மேம்பாட்டுத்துறையின் தலைவர் மற்றும் பால்பண்ணைத் துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பது, பால் பொருட்களின் விலையைக் குறைப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையில் தாங்கள் மேற்கொள்ளவுள்ள முதலீடுகள் குறித்தும் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அனுர குமார திஸாநாயக்க கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகளை பார்வையிடுவதற்காக இந்தியாவின் அமுல் பால் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
நாட்டிலுள்ள பண்ணைகளை நேற்று தொடக்கம் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
அந்த பண்ணைகளின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களை அமுல் நிறுவன பிரதிநிதிகள் குழு நடைமுறைப்படுத்தவுள்ளது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 31 பண்ணைகள், சுமார் 28,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காணப்படுகின்றன.
அவற்றை அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு முன்னர், பண்ணைகளின் பெறுமதியை மதிப்பிடத் தொடங்கியுள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.