சிறீதரனுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி ; சுமந்திரன்
ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மிகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் முன்மாதிரியாக நடத்திக் காட்டியிருக்கின்றது.
இதிலே வெற்றிபெற்ற நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது தலைவர் மாவை சேனாதிராஜா வழிநடத்திய தமிழரசுக் கட்சிப் பொறுப்பு, இப்பொழுது சிறிதரனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
இந்தப் பயணத்திலே நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். இதை நாம் இருவரும் தேர்தல் காலத்திலும் தெளிவாக மக்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அவ்வாறே தொடர்ந்து பயணிப்போம்.
ஆகவே, எனது முழுமையான ஆதரவினை தற்போது ஜனநாயக முறையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தலைவர் சிறீதரனுக்கு முழுமையாக வழங்குவேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.