Home » சிறைக் கைதிகள் அடிமை விலங்குகளா?

சிறைக் கைதிகள் அடிமை விலங்குகளா?

Source
யாழிலிருந்து நடராசா லோகதயாளன்.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளிற்கு சமம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அவ்வகையில் சில படங்கள் சரித்திரத்தையே மாற்றியமைத்தன. பல புகைப்படங்கள் காலங்களின் ஆவணங்களாயின. இன்றைய சமூக ஊடக காலத்தில் ஒரு புகைப்படமோ அல்லது கானொளியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
இதில் சில புகைப்படங்கள் மிகவும் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவை உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. ஊடகத்துறையில் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புலிட்சர் பரிசை சில புகைப்படங்கள் பெற்று அதையும் அதை எடுத்த புகைப்படக்காரரையும் எக்காலத்திற்கும் புகழில் உச்சிக்கு எடுத்துச் சென்றன.
அப்படி இலங்கையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படம் உடனடியாக ஏற்படுத்திய தாக்கம் நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் வரை சென்றுள்ளது.
யாழில் சிறைக் கைதிகளை சங்கிலியில் பிணைத்து கொண்டு செல்லும் விடயம் உள்ளூர் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தல் அதன் தலைப் பணிமனையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி தமது கடற்பரப்பில் பிரவேசித்ததான குற்றச்சாட்டில் அவர்கள் இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்ட அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அப்போது அவர்கள் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகற்கு முன்னர் ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக சந்தையில் விற்கப்பட்ட காட்சிகளை நினைவூட்டுகிறது என்று உள்ளூர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். அவ்வகையில் ஆப்ரிக்க மேற்கு கரையோர நாடுகளில் வெள்ளைக்கார முதலாளிகளால் விலைக்கு வாங்கப்பட்டு கரும்பு மற்றும் புகையிலைத் தோட்டங்களில் அடிமைகளைகாக வேலை செய்வதற்கு இவர்கள் கப்பலேற்றப்பட்ட பிறகு அவர்களுக்கும் தாய் மண்ணிற்குமான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டது.
அந்த கறுப்பின மக்களின் கை, கால்கள், கழுத்து ஆகிய இடங்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மிகவும் மோசமான சூழலில் ஒருவரோடு ஒருவர் இடுப்பில் மற்றொரு சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலகளவில் பிரசித்தி பெற்று அடிமை வியாபாரம் ஒழிக்கப்படுவதற்கு அடித்தளமிட்டது என்பது உலக வரலாறு. ‘
இப்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களும் அவ்வகையிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஆப்ரிக்க அடிமை வியாபார காலங்களை நினைவூட்டியது என்றும் அந்த உள்ளூர் செயற்பாட்டாளர் ஆழ்ந்த கவலை வெளியிட்டார்.
“இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் அவமானகரமான ஒரு செயல், ஜனநாயக விழுமியங்களை பேணுவதாக கூறும் ஒரு நாட்டில், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு இதுவொரு எடுத்துக்காட்டாக உள்ளது”
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொள்ளும் இப்படியான செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தையும் மனித நேயத்தையும் பிற நாடுகளில் அம்பலப்படுத்தி, மேலும் அவப்பெயர் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு மோசமாகவுள்ளது என்று அந்தப் படங்களைப் பார்த்தவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக கண்டனமும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்படும் விளக்கமறியல் கைதிகளை வழக்குத் தவணைகளிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு சிறைச்சாலைகளிற்கே உரியது. இவ்வாறு அழைத்து வரும் விடயம் தொடர்பில் கடந்த ஆண்டு ஆரம்பத்திலும் ஓர் விமர்சணம் எழுந்தபோதும் எவரும் கண்டுகொள்ளவில்லை இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்ற வாசலில் கைதிகள் வரிசையாக ஒருவரோடு ஒருவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடிமைகளைப் போல் கொண்டுவரப்படும் அவலம் மீண்டும் அரங்கேறியது.
அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களும் இந்தாண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய 2ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக அவர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றி வரப்பட்டு நீதிமன்ற வாசலில் இறக்கப்பட்டு கால் நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களை கை விலங்கு போடப்பட்டு அழைத்துச் செல்லாது ஒரே சங்கிலியில் இணைந்து பூட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டது  இந்திய ஊடகங்களில் மிக கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. அந்தப் படங்கள் இந்திய ஊடங்கள் மட்டுமின்றி மேலும் பல சமூக ஊடகத் தளங்களிலும் வெளியாயின.
”எமது நாட்டு மீனவர்களை மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக மனித உரிமைகளை மீறும் வகையில் அடிமைகளைப் போன்று இலங்கை அதிகாரிகள் நடத்தியது கண்டிக்கத்தக்கது, எமது கண்டனத்தை நாங்கள் உரிய வகையில் இந்திய அரசின் ஊடகாக இலங்கை அரசிற்கு தெரிவிப்போம். இலங்கை மீனவர்களோ அல்லது வேறு வகையில் சட்ட விரோதமாக இந்தியப்பரபிற்கு உள்ளே நுழைபவர்களை ஒரு போது இந்தியா அவ்வாறு நடத்தியது இல்லை” என்று புதுச்சேரி அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விமர்சனத்தை முன்வைக்கும் அளவிற்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிர்வாகம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. இவ்வாறு ஒரே சங்கிலியில் பிணைக்கப்பட்ட அனைவரும் ஒரே திசையில்  கரங்களால் பிணைக்கப்படவில்லை. மாறாக வலது கரம் இடது கரம் என ஒழுங்கற்ற முறையில் நடப்பதற்கே பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளால் விரும்பிய கரங்களில் இணைக்கப்பட்டுள்ளதனால் அந்த விளக்கமறியல் கைதிகள் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
இத்தனைக்கும் அப்பால் ஒரு சங்கிலியில் பிணைக்கப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வீதியில் ஓர் அணர்த்தம் ஏற்படுமாக இருந்தால் எஞ்சிய கைதிகள் எவ்வாறு உயிர் தப்ப முடியும் என்ற ஐயமும் எழுகின்றது. எனவே இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஏன் உரிய அளவில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வினாவும் உள்ளது.
நீதிமன்ற வாசலிலேயே அவர்கள் மனிதாபிமானமற்ற வகையில் சங்கிலியால் இணைக்கப்பட்ட அவர்களது கைகள் அவிழ்க்கப்படுவதனால் இவர்களை எவ்வாறு கொண்டு வரப்படுகின்றனர் என்பதனை நீதிபதிகளும் கண்டிருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று மூத்த சட்டத்தரணி ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதனால் இவை குற்றப்பத்திரமாக இன்றி மனிதநேய விண்ணப்பமாக எந்த நாட்டுக் கைதியையும் மனிதர்கள் என மதித்து ஒரே சங்கிலியில் இழுத்துச் செல்லப்படுவது உடன் நிறுத்த ஏதும் நடவடிக்கை உண்டா என யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டேன்.
”எந்த மணிதருக்கும், எந்தக் கைதிக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு இதனால் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு மட்டுமல்ல சிறைச்சாலை ஆணையாளருக்கு  விசேட தெளிவூட்டல் வழங்கப்படவும்  எதிர்காலத்தில் இவ்வாறு இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யக் கோருவதற்காகவும் எமது தலைமைப் பணிமனைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளோம்” என்று பொறுப்பாகவும் கவலையுடன் கூடிய பதிலையும் அளித்தார்.
சில அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களால் நாட்டின் சட்டங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களிற்கு முரண்பாடக நடந்துகொள்வது நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பாரிய மனித உரிமை மீறலாகவும் கருதப்படும் என்றார்.
”ஏனெனில் இவ்வாறான செயலால்  நாட்டின் சுய மரியாதையை இழக்க முடியாது என்பதோடு எதிர்காலத்தில் அணர்த்தம் ஏதும் இடம்பெறாமல் தடுக்கப்பட வேண்டியதும் கட்டாயமாகும் என  வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
உலகளவில் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் இலங்கைக்கு மோசமான அவப்பெயரே உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. போர் முடிந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், போர்க்காலத்தில் இடம்பெற்ற மோசமான வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பில் அரசு இதுவரை காத்திரமாக பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை. இறுதிகட்டப் போர் முடிந்த பிறகு படையினரிடம் சரணடைந்த, கையளிக்கப்பட்ட அல்லது வலிந்து கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்ன என்பது இன்றுவரை பதிலளிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.
அப்படியான சூழலில் கைதிகளை அடிமைகளைப் போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது இலங்கைக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்துமே தவிர பன்னாட்டளவில் நல்லெண்ணத்தையும் ஆதரவையும் பெற்றுத்தராது என்பதே யதார்த்தம்.
கடந்த ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது உடனடியாக நாடு ஓரளவிற்கேனும் அதிலிருந்து அதிலிருந்து விடுபட உடனடியாக இந்தியவே உதவியது என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படியன நிலையில், சட்ட விரோதமாக அறிந்தோ அல்லது அறியாமலோ இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்களை இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வாறு நடத்துவது இந்திய அரசை துணுக்குறச் செய்யும்.

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image