ஜனாதிபதி நல்ல செய்தியுடனேயே யாழிற்கு வரவேண்டும் – முருகையா கோமகன்
” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” என்ற செய்தியுடனேயே ஜனாதிபதி யாழிற்கு வருகை தர வேண்டுமென” குரலற்றவர்களின் குரல், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
நாளைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் , இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார்.
இதனை நாம் வரவேற்கிறோம். தமிழர் பிரச்சனைகளில் அவசரமாகவும் , அவசியமாகவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாக , காணி விடுவிப்பு , தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை உள்ளிட்டவை உள்ளன.
காணி விடுவிப்பு நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே நேரம் , தொல்லியல் திணைக்களம் , வனவள திணைக்களங்கள் ஊடாக தமிழ் மக்களின் காணிகளை மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கண்டிக்கிறோம். அதேவேளை கடந்த 29 ஆண்டு காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த 29 ஆண்டுகாலமாக சிறைகளில் கொடூர தண்டனைகளை அனுபவித்து வரும் 12 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து , அவர்களை தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக அவர்களை உயிருடன் மீள உறவுகளிடம் கையளிக்க வேண்டும். அண்மையில் கூட இந்திய சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் அண்ணா இலங்கைக்கு உயிருடன் மீள வரவில்லை.
அரசியல் கைதிகளை உயிருடன் உறவுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்த போது சத்திய லீலா எனும் தமிழ் அரசியல் கைதிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவு என மேன் முறையீடு செய்யப்பட்டு , மேன் முறையீட்டு விசாரணைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட வேண்டும் என கோரி இருந்தோம். அவ்வேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடன் இருந்தார். தாம் அது தொடர்பில் கவனத்தில் எடுப்பதாகவும் , அமைச்சர் தான் அவரை மன்னித்து விட்டதாகவும் கூறி இருந்தார்.
எனவே சத்திய லீலாவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கோருகிறோம் . யாழ் வரும் ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடுதலை எனும் நல்ல செய்தியுடன் வருவார் என எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.