Home » ஜூலை மாத இறுதிக்குள் பேசி மிக முக்கியமான விடயங்களுக்கு தீர்வை காண்போம் – ஜனாதிபதி உறுதி

ஜூலை மாத இறுதிக்குள் பேசி மிக முக்கியமான விடயங்களுக்கு தீர்வை காண்போம் – ஜனாதிபதி உறுதி

Source
அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை சகித்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனாக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழலை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரச தரப்புச் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளியுவுத்துறை அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், சாகல ரத்ன நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், நீண்ட காலமாக அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றோம். அதை செய்கின்றோம். இதை செய்கின்றோம் என்று கூறி எங்களை நீங்கள் பொறுமையின் எல்லை வரை கொண்டு சென்றுள்ளீர்கள். இனியும் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்கள் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட இனம். எங்களுடைய சுயநிர்ணய உரிமையை தொடர்பில் வெளிப்படையான முடிவை நாம் எடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். ஆகவே தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்களே வலிந்து இந்த சந்திப்பை ஏற்படுத்தியிருந்தோம். நாங்கள் இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கப் போகின்றோம். நீங்கள் செய்வதாக தெரிவித்த எந்த செயற்பாடுகளையும், இதுவரை செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூலை மாத இறுதிக்குள் இரண்டு நாட்கள் பேசி மிக முக்கியமான விடயங்களுக்கு தீர்வை காண்போம். அதனடிப்படையில் அதன் பின்னரும், தீர்வு காணாவிடின் என்னை நீங்கள் பேசுங்கள். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள் என தெரிவித்தார். ஜனாதிபதியின் கருத்தின்படி மாவட்ட சபை சம்பந்தமான கருத்துக்களை அவர் முதன்மைப்படுத்தியதை அறியமுடிகின்றதாக அச் சந்திப்பில் இருந்த எம்.பி ஒருவர் தெரிவித்தார். காங்கேசன்துறை தொகுதியில் உள்ள மயிலட்டி, தையிட்டி போன்ற மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவம் தம்வசம் வைத்துள்ளது. மேலும் கிளிநொச்சியின் நகரப்பகுதியில் 40 வீதமான காணிகள் இராணுவத்தினரிடமே உள்ளது. கிளிநொச்சியில் நூலகம் அமைப்பதாக இருந்தாலும் சரி, கலாச்சாரம் மண்டபம் அமைப்பதற்கு காணிகளை தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது. உங்களது காலத்தில் அதனை விடுவிப்பதாக கூறினீர்கள். இருப்பினும் இன்னமும் இக் காணிகள் விடுவிக்காமல் இருப்பது ஏன் என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஐனாதிபதி நாங்கள் இரண்டு மூன்று தொகுதிகளாக காணி விடுவிப்புக்களை செய்வதாக உத்தேசித்துள்ளோம். முதல் கட்டமாக உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை மக்களுக்கு மீள வழங்குவது, அடுத்ததாக விடுவிக்க கூடிய காணிகள் தொடர்பில் தீர்மானிப்பது, படையினரின் தேவைக்குள்ள விடுவிக்க முடியாத காணிகளுக்கு பதிலாக நஷ்ட ஈட்டை வழங்குவதுடன், மாடி வீடுகளை அமைத்து மக்களுக்கு வழங்குவது என்றார். தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அரசியல் அதிகார பிரச்சினைக்கும் உடனடி தீர்வாக மாகாண சபை தேர்தலை நடத்தி அதன் ஊடாக சில பிரச்சினைகளையாவது தீர்க்க முடியும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் நடத்துவதற்கான எண்ணத்தை ஜனாதிபதி கொண்டிருக்கவில்லை. இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவதற்கான யோசனையை அவர் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்த பதில் கருத்துக்களின் இருந்த அறிய முடிந்ததாக அந்த எம்.பி தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதியிடம் மலேசியாவின் பினாங்கில் உள்ளது போன்ற இடைக்கால நிர்வாகத்தை நீங்கள் யோசிக்கிறீர்களா? அல்லது ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி இடைக்கால நிர்வாகம் என கேள்வியெழுப்பியபோது ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி இடைக்கால நிர்வாகம் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இருப்பினும் இது காலத்தை மேலும் இழுத்தடிக்கும் முயற்சி என்று வெளிப்படையாக் ஜனாதிபதியிடம் கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது. மகாவலி ஜே வலயம் எச் வலயம் என்பவற்றை உடனடியாக நிறுத்துமாறு தான் பணித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். தொல்பொருள் திணைக்களம் திரியாய் பகுதியில் விகாரை அமைக்க முயற்சிப்பது தொடர்பாக பேசப்பட்டபோது. மக்களுக்கே அந்த காணிகளை வழங்க வேண்டும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானத்திருக்கின்றோம் என ஐனாதிபதி தெரிவித்தார். இதன் போது காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஒரு தீர்வினை காண்பதற்கு, சர்வதேசத்தின் உதவிகள் அல்லது, உலக நாடுகளின் நீதிபதிகளின் பங்களிப்புக்கள் ஏதேனும் உள்வாங்கப்படுவது குறித்து அரசு தீர்மானங்களை கொண்டுள்ளதா? என வினவியபோது இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஜோசனைகள் இல்லை என்றார்.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image