Home » டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு அவசியம்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு அவசியம்

Source

டெங்கு நோய் சுகாதாரப் பிரச்சினை மட்டுமன்றி, அது ஒரு பொருளாதார, சமூகப் பிரச்சினையாக உள்ளதாகவும், பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மட்டும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் 25,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு ஒன்பது பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் கலாநிதி சுதத் சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையுடன் டெங்கு, தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் என்பதால் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் கலாநிதி சுதத் சமரவீர மேலும் கூறியதாவது,

டெங்கு என்பது வயது மற்றும் அந்தஸ்தைப் பார்க்காமல் தொற்றக்கூடிய ஒரு நோயாகும். மேலும், பலர் இந்த நோயிலிருந்து மீண்டாலும், உயிரிழப்பு அபாயம் உள்ள ஒரு நோய் இது. இந்த அபாயம் காரணமாகத்தான் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலப்பகுதியில் பருவமழை வருவதால் டெங்கு பற்றி அதிகம் பேச வேண்டியுள்ளது.

அதன்படி, 2023 இன் இறுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் நிலைமையுடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரி இல் 10,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஆனால் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதமளவில் 2234 நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். ஆனால் மே மாதத்தில் 2647 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

டெங்கு என்பது உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு பொருளாதார மற்றும் சமூக பிரச்சினையாகும். எனவே, பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மாத்திரம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. நாடென்ற வகையில் அரசாங்கத்தின் அனைத்து துறைகள், தனியார் துறைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே டெங்கு நோயைத் தடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய அதிகாரி, விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க,

2024ஆம் ஆண்டு இலங்கையில் 25 417 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்குவைத் தடுப்பதற்கான மிக அடிப்படையான வழி, நுளம்பு பரவலைத் தடுப்பதாகும். அதற்கு வீடுகள், பாடசாலைகள், பணியிடங்களில் நுளம்புகள்உருவாகும் இடங்களை அகற்றுவது பொது மக்களின் பொறுப்பாகும்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டால், இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி, உரிய ஆலோசனை பெற வேண்டும். நோயறிதலை மருத்துவரிடம் விடுங்கள். இங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ‘பெரசிட்டமோல்’ மாத்திரையை மாத்திரம் உட்கொள்ள வேண்டு” என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபைத் தலைவரும் தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் விசேட வைத்தியருமான ஆனந்த விஜேவிக்ரம,

இந்தக் காலகட்டத்தில் அதிக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை டெங்கு நோயாகக் கருதுவது மிகவும் அவசியம். இந்த அறிகுறிகள் இருந்தால், முதலில் உடல் ரீதியாக ஓய்வெடுப்பது அவசியம். வலி ​​நிவாரணி அல்லது ‘பெரசிட்டமோல்’ தவிர ஏனைய மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. மற்ற மருந்துகளை உட்கொள்வது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், முழுமையான இரத்த எண்ணிக்கைப் பரிசோதனை (FBC) செய்து, அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதன் பின்னர் தேவையிருப்பின் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

இதற்கிடையில், நீங்கள் நீர் மற்றும் கஞ்சி வகைகள், ஜீவனி, இளநீர் மற்றும் எலுமிச்சை போன்ற பானங்களைப் பருக வேண்டும். சிவப்பு நிறத்தில் அல்லது செயற்கை இரசாயனங்கள் கொண்ட பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும், நிலைமையின் தீவிரத்தை குறைக்கவும் முடியும். குறிப்பாக, காய்ச்சல் குறைவதால் டெங்கு நோய் குணமாகிவிட்டதாக அர்த்தம் இல்லை.

மிகவும் சிறிய குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பருமனானவர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்” என்று தெரிவித்தார்.

கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக ஆலோசகரும் பிராந்திய தொற்றுநோயியல் விசேட வைத்தியருமான புத்திக மகேஷ்,

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு மிகவும் முக்கியமானது. தற்போது பெய்து வரும் மழையால், அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.நுளம்பின் வாழ்க்கைச் சுழற்சியின் படி, குடம்பி நிலையிலிருந்து நுளம்பாக மாற 07 நாட்கள் ஆகும் என்பதால், வாரத்திற்கு ஒருமுறை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதன் மூலம் டெங்கு பரவுவதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக நிவாரண முகாம்களை சுற்றியுள்ள பகுதிகளை முற்றிலும் நுளம்புகள் இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டும்.

டெங்கு மற்றும் பிற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த பிரதேச சுகாதார அலுவலர் அலுவலகம் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது. ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது, ​​மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு. மக்களின் ஆதரவுடன் அந்த நிலையை மேலும் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேல்மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு குழு ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நுளம்பு குடம்பிகளை இனங்கண்டு அதன் மூலம் குடம்பி அழிப்பு மருந்துகளைத் தெளித்து வருகின்றது” என்றும் தெரிவித்தார்.

பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்தியர் என். ஆரிப், வைத்தியர் சுனித் குமாரப்பெரும, ஆர். கே. எஸ். ஈ.ரணவீர ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image