Home » தமிழரசுக் கட்சியின் கிளைகளை இலங்கைக்கு வெளியே அமைப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை!

தமிழரசுக் கட்சியின் கிளைகளை இலங்கைக்கு வெளியே அமைப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை!

Source

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன.

அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகத் தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்நாட்டு சட்ட வரம்புகளைக் கடைப்பிடித்துச் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களின் தாயக மக்கள் மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயற்பட்டு வந்துள்ளது. அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இயற்கைப் பேரிடர்களின் போதும், பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகம் கொடுத்தபோதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயற்றிட்டங்களிலும் நேரடியாகவும், எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக உள்ளோம். எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயற்படக் கட்சி ஆயத்தமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டது என்று சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும், வேறு சிலவற்றில் ‘இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்’ (ITAK FORUM) அமைக்கப்பட்டது என்றும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு. இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை.” – என்றுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image