Home » தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை

Source

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்து அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3% ஆக மேம்படுத்தவும், 2025 ஆம் ஆண்டில் 5% ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தும் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என வட. மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்தவர்கள் என எவரும் இலங்கைக்குள் இருக்க கூடாதெனவும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 1788 பேர் காணாமல் போயிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருப்பதோடு அவற்றில் 1289 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 500 க்கு கிட்டிய முறைப்பாடுகளை விரைவில் விசாரணை செய்யுமாறு அதிகாரிக்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த பணிகளை நிறைவு செய்து காணாமல் போனோர் அலுவலகத்துடன் தொடர்புபட்டு செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் ஒன்றுகூடியிருந்த மேற்படி கூட்டத்தில் மாவட்டத்திற்குள் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் அது தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மீள் குடியமர்த்தல், கல்வி, சுகாதாரம், காணி, மீன்பிடி, விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் வழக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

வட. மாகாண அபிவிருத்திக்கு அவசியமான திட்டமிடலை தயாரித்து துரித அபிவிருத்திக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி நாட்டின் பொருளதாரத்தை மீட்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

புதிய பொருளாதார ஆணைக்கு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எவர் வேண்டுமானாலும் நாட்டுக்குள் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு அதற்கான அழைப்பை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கின் வலுசக்தியை பாதுகாத்து வலுசக்தி ஏற்றுமதி செய்வதற்கு அவசியமான அனைத்து திட்டமிடல்களும் காணப்படுவதாகவும் பூநகரியை வலுசக்தி கேந்திர நிலையமாக மாற்றுவதாகவும் உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கின் விவசாயத்துறையை விவசாய நவீனமயப்படுத்தலுக்குள் உள்வாங்கி அதிலிருந்து பெறப்படும் பலன்களை இரட்டிப்பாக்கிகொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும் அறிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்று காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

வடக்கின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கான இரு திட்டங்களுக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த கொடுப்பனவுகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவானன் சிவபாதசுந்தரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image