Home » நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது இழுக்கான விடயம் – சர்வ மக்கள் கட்சித் தலைவி த.உதயகலா

நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது இழுக்கான விடயம் – சர்வ மக்கள் கட்சித் தலைவி த.உதயகலா

Source
எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் தாய்நாட்டுக்காகக் கொடுத்து விட்டு இன்று எங்களுடைய பிள்ளைகளைக் காணவில்லை என்று வெளிநாடுகளில் விலைபேசுகின்றோம். அதை வைத்துப் போலி அரசியல் கூடச் செய்கின்றார்கள். நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது ஒரு இழுக்கான விடயம் என சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா தெரிவித்தார். சர்வ மக்கள் கட்சியின் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தொடர்பில் பலர் பலவிதமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இது மக்களுக்கான மக்களோடு சம்மந்தப்பட்ட கட்சி. இன்றைய காலகட்டத்தில் எமது நாடு மிகமிகப் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய காலத்தில் மக்களுக்கான சேவை மிகவும் தேவையாக இருக்கின்றது. நாங்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் கதிரைகளில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசுபவர்களாக மட்டுமில்லாமல் மக்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடுதான் நாங்கள் இந்தக் கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம். மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றத்தை எமது சர்வ மக்கள் கட்சியூடாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாடு எமக்கு விழுந்திருக்கின்றது. நாங்கள் பல வலிகளைத் தாண்டித் தான் இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளோம். எனது கணவர் யுத்த காலத்தில் அமரிக்காவின் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் வன்னிடெக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் எனது கணவர் இராணுவத்தால் அழைத்தவரப்படடு சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார் என்று யு.டி.எச்.ஆர் என்ற செய்தியமைப்பு செய்தி வெளியிட்டு அதற்காக வெளிநாட்டில் விருதினையும் பெற்றிருந்தார்கள். இதில் வெட்கக்கேடான விடயம் என்னவென்றால் உயிரோடு இருக்கின்ற ஒருவரை இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டு அதற்கான விருதினை வெளிநாட்டில் சென்று மார்தட்டி வாங்குகின்றார்கள் என்றால் அதனை விட மிகக் கேவலமான விடயம் தமிழர்கள் மத்தியில் வேறு ஒன்றுமே இல்லை. இன்றும் கூட காணாமல் போனோர்களின் உறவுகள் என்ற ரீதயில் பலர் எமது அலுவலகத்திற்கு வருகின்றார்கள். இங்கு வருகின்றவர்கள் நாங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை, எந்த உதவியும் செய்வதில்லை நீங்கள் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களா என்று கேள்வியெழுப்புகின்றார்கள். காணாமல் போனமை என்ற பொய்யான தகவல்களாலும், வதந்திகளாலும் நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். எங்களுக்குத் தேவையான ஒரே ஒரு விடயம் நீதி. யார் தவறு செய்திருந்தாலும் அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும். யுத்தம் என்பது இரண்டு தரப்பாரும் வீரத்தோடு விளையாடுகின்ற விளையாட்டு. அந்த யுத்தத்திலே வெற்றியையும், தோல்வியையும் எவன் சமமாக ஏற்கின்றானோ அவனே வீரன். அந்த வகையில் நாங்கள் இன்றும் கோழையாகவே இருக்கின்றோம். யுத்தத்திலே ஒரு தரப்பு வென்றவிட்டது. எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் தாய்நாட்டுக்காகக் கொடுத்து விட்டு இன்று எங்களுடைய பிள்ளைகளைக் காணவில்லை என்று வெளிநாடுகளில் விலைபேசுகின்றோம். அதை வைத்துப் போலி அரசியல் கூடச் செய்கின்றார்கள். நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது ஒரு இழுக்கான விடயம். நாங்கள் பொய் பேச வேண்டிய தேவையும் கிடையாது மற்றையவர்களுக்கு ஏதாவதொரு விடயத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லை. காணாமல் போனோர் என்ற விடயத்தை வைத்து போலிப் பிரச்சாரங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களைக் கூட எனக்கு நன்றாகத் தெரியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராட்டத்தில் இறந்திருந்தும் கூட அவர்கள் புலிகள் அமைப்பில் இருக்கும் போதுதான் இறந்தார்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரிந்திருந்தும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இந்தத் தவறுகளைத் தட்டிக் கேட்டால் நாங்கள் அரசாங்கத்திற்குச் சார்பானவர்களா என்று கேட்கின்றார்கள். நாங்கள் உண்மைக்காக நீதிக்காகப் போராட வேண்டும் சரியான விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். எங்கள் கட்சியின் ஒரே ஒரு நோக்கம் பசியில்லா இலங்கையை உருவாக்குதல். தேவை என்று வரும் மக்களின் தேவையை பூரணமாக நிவர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். அரசியல் இலாபம் எங்கள் கடசிக்குள்ளே கிடையாது. எங்களது சொந்த உழைப்பிலேயே நாங்கள் இந்தக் கட்சியை நடத்தி வருகின்றோம். இன்றுவரை சுமார் எழு இலட்சம் மக்களின் அன்பை நான் சம்பாதித்திருக்கின்றேன். அரசாங்கத்திற்கும் எங்களது கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதனுடைய முழுமையான உரிமையாளர் நான்தான். நாங்கள் இலங்கை பூராகவும் சேவை செய்துள்ளோம். ஆனால் எதனையும் வெளிப்படுத்தவில்லை. மட்டக்களப்பை மையத் தளமாகக் கொண்டமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. போட்டியொன்று இருந்தால்ததான் வெற்றி என்பது இருக்கும். நிச்சயமாக சில இடங்களிலே சில சாதனைகளைப் புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடே நாங்கள் மட்டக்களப்பை மையத்தளமாகத் தெரிந்தெடுத்தோம். ஏனெனில் எனது கணவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்ற பொய்யான தகவலை மட்டக்களப்பு அரசியல்வாதியொருவர் பாராளுமன்றத்தில் கூட பேசியிருக்கின்றார். நான் அவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது நாங்கள் நடைபவணி சென்று கொண்டிருக்கின்றோம் தற்போது பேச முடியாது என்று சொல்கின்றார். ஒரு நபர் உயிருடன் இருக்கும் போது அவர் கொல்லப்பட்டார் என்று பாராளுமன்றத்தில் பேசுகின்றார். 2009ம் ஆண்டு யுத்தம் முடிகின்றது அவர் 2021ம் ஆண்டு பேசுகின்றார். இவ்வாறான சில விடயங்களைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நான் இங்கே வந்தேன். நான் உள்ளுராட்சித் தேர்தல் கேட்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை. நாங்கள் எங்களது சேவையை மையப்படுத்திச் செய்து கொண்டிருந்தோம். அதற்காக தேர்தல் திணைக்களத்தில் நாங்கள் நிவாரணம் கொடுப்பதாக முறைப்பாடு செய்திருந்தார்கள். தேர்தல் காலத்தில் இவ்வாறு செய்ய வேண்டாம் என்றார்கள். நாங்கள் தேர்தல் கேட்கவில்லை என்பதைத் தெரியப்படுத்தினோம். ஆனாலும் எமது சேவையை நிறுத்தச் சொன்னார்கள். இதனால் எமது அலுவலகத்தில் பணி புரியும் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இல்லாமல் போனது. அந்த ஒரே ஒரு காரணத்தினாலேயே நாங்கள் உள்ளுராட்சித் தேர்தல் கேட்கவேண்டியதாயிற்று. ஒரு பெண் என்ற விடயம் வந்துவிட்டால் அதனை எவ்வாறாவது முடக்குவதற்கு கதைகள் பல கட்டப்படும். நாங்கள் யாருக்கும் பயந்து இந்த அரசியலுக்கு வரவில்லை. இது எனது சொந்த முயற்சி சொந்த உழைப்பு. இது இன்னும் விஸ்தீரணமடையும். அடுத்தமுறை நிச்சயமாக நாங்கள் பாராளுமன்றம் செல்வோம். மக்களுக்குத் தேவையான எல்லா சேவையையும் வழங்க வேண்டும். ஒரு பதவியில் இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதனை நாங்கள் மக்களுக்குச் செய்ய வேண்டும் அதனூடாக மற்றைய அரசியல்வாதிகளும் மாற வேண்டும். அரசாங்கம் செல்கின்ற பாதை சரியா தவறா என்பது அரசியல்வாதிகளின் கையில் தான் இருக்கின்றது. நாங்கள் எல்லோரும சேர்ந்து மாற்றத்தை உருவாக்கினால் தான் அரசாங்கம் மாறும். அரசாங்கம் என்பது மனிதர்களால் நடத்தப்படுகின்ற ஒரு தலைமைத்துவம். அந்த தலைமைத்துவத்திலே நாங்கள் ஜனாதிபதியையோ அல்லது ஒரு நபரையோ சாட முடியாது. பாரளுமன்றம் எதற்காக இருக்கின்றது. அனைவரும் சேர்ந்து தவறு செய்துவிட்டு தனியொரு நபர் மீது குற்றத்தைச் சுமத்துவது எந்த விதத்திலே நியாயம். இன்று அரசியல் என்பது ஒரு பிழைப்பாகப் போய்விட்டது. அரசியலுக்கு வந்ததன் பின்னர் எந்த நாட்டுடன் தொடர்பு வைக்கலாம் எவ்வளவு பணத்தைப் பெறலாம் தங்கள் பெட்டிகளுக்குள் பூட்டி வைக்கலாம் என்றுதான் சிந்திக்கின்றார்கள். அதனால் எல்லா நாட்டு தொடர்பையும் கொண்டு வருகின்றார்கள். எங்களுக்கு எந்த நாட்டுத் தொடர்புகளும் தேவை இல்லை. எங்களுடைய ஒரே நோக்கம் மக்களுக்குச் சேவை செய்வது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் காரணமாக நிச்சயமாக ஒரு மாற்றம் வரும், மக்களுக்கு நிச்சயம் நன்மை நடக்கும். அடுத்த முறையும் இதே ஜனாதிபதிக்கே மக்கள் வாக்களிக்கும் நிலைமையும் ஏற்படும். இது எந்தக் கட்சிக்கும் சார்பான கருத்து அல்ல. நான் எந்தக் கட்சிக்கும் சார்பானவள் அல்ல. தற்போது நாட்டின் நிலைமைகள் நிறைய மாறியிருக்கின்றன. நடக்க முடியாது என்று சொன்ன விடயங்கள் பல நடந்திருக்கின்றன. எதிர்காலத்திலும் நிறைய மாற்றங்கள் வரும் என்று தெரிவித்தார். AR
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image