நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள மூன்றாவது ஜெனரேட்டரை மீள ஆரம்பிக்க சுமார் 12 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்த இயந்திரத்தின் கொதிகலனின் நீர் குழாய் வெடித்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக இயந்திரத்தை பழுது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது ஜெனரேட்டரின் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக மின்வெட்டு ஏற்படாது எனவும் தெரிவித்தார்.