பொதுத்தேர்தலில் ராஜபக்ச கும்பலுக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் – சந்திரிகா கோரிக்கை
நாட்டைச் சீரழித்த ராஜபக்சக்கள் கும்பல் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு மக்கள் எவரும் இடமளிக்கக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என இலங்கை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ள நிலையில், சந்திரிகா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி நாட்டைச் சீரழித்தவர்கள் ராஜபக்சக்களே. இதனை உயர்நீதிமன்றமும் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, இப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களின் சகாக்களும் மீண்டும் நாடாளுமன்றம் வர நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ராஜபக்ச கும்பலுக்கு நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும். அவர்களைக் கூண்டோடு தோற்கடிக்க வேண்டும். அவர்களின் அரசியல் அத்தியாயம் இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்” – என்றார்.
மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கமைய குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்ட அனைவரும் தங்கள் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.