Home » பொலிஸாரின் தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு

பொலிஸாரின் தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு

Source
இந்து மக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான மகாசிவராத்திரி விரத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு, வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றவர்களுக்கு இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். சிவராத்திர தின பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இந்து மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களை ஆலயத்திற்கு செல்லவிடாது ஒலமடு – வேலடி சந்தியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இடைமறித்தனர். எனினும் வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றம் கடந்த வருடம் அனுமதி வழங்கியுள்ள விடயத்தை மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அதற்கு அனுமதி வழங்கிய பொலிஸார், வாகனங்களில் ஆலயத்திற்குச் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர். ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதையில் பொலிஸ் வீதித்தடை போடப்பட்டு அந்த பகுதிக்குள் வசிப்பவர்கள் மாத்திரம் பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய ஒலமடு – வேலடி சந்தியில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தை நடந்தே சென்று மக்கள் ஆலயத்தை அடைந்து வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, இன்று இரவு சிவராத்திரி விரத நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீர், பூசைப் பொருட்களை கடும் வெயிலுக்கு மத்தியில் பக்தர்கள் பல கிலோமீற்றர்கள் சுமந்துச் சென்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆலயத்தைச் சுற்றி பொலிஸாரும், விசேட அதிரடிப் படையிர் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, நேற்றிரவு (மார்ச் 07) சிவராத்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்குச் சென்ற ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பூசகர் தம்பிராசா மதிமுகராசா மற்றும் ஊடகவியலாளர் தவராசா கலைச்செல்வன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடந்த வார இறுதியில் ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களது முயற்சிக்கு பொலிஸாரால் தடங்கல் ஏற்பட்டிருந்ததாக தெரிவித்து ஆலய  நிர்வாகத்தினால் வவுனியா நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நேற்று வியாழக்கிழமை மாலை உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்தபோதே குறித்த இருவரையும்  நெடுங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர். சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்த வருடம் அனுமதி வழங்கியிருந்தது. ஆலயத்தின் விக்கிரகங்களை இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியமை தொடர்பிலான வழக்கு கடந்த வருடம் ஏப்ரல் 27ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தேவராசா சுபாஜினி பிறப்பித்த உத்தரவில், தொல்லியல் சின்னங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தார். “ஆதிசிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் வருகின்றமையால் குறித்த தொல்பொருளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குறித்த விக்கிரகங்களை பிரத்தியேக முறைப்பாட்டாளர்களினால் அதே இடத்தில் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சோதமாக்கப்பட்ட விக்கிரகங்களையும் வழிபாட்டு பொருட்களையும் வழக்குத் தொடுநர்களின் ஊடாக பிரத்தியேக முறைப்பாட்டாளருக்கு ஒப்படைக்கப்பட்டு பிரத்தியேக முறைப்பாட்டாளர்கள் குறித்த விக்கிரகங்களையும் வழிபாட்டு விடயங்களையும் தொல்பொருளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தொல்பொருள் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பிலும் வழக்குத் தொடுனரான நெடுங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரசன்னத்தோடும் குறித்த விக்கிரகங்களை அதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுத்து மன்றுக்கு அறிக்கையிடுமாறு கட்டளையாக்கின்றது.” எவ்வாறெனினும் சமூக வலைத்தளங்களில் நேற்றைய தினம் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த மெடில்லே பஞ்ஞாலோக தேரர், வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக நீதிமன்ற கட்டளைக்கு மாறான கருத்தை வெளியிட்டிருந்தார். “நீதி மன்றத்தால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு. தொல்லியல் திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு என்னவெனின், விசேட சமய நிகழ்வுகள், பூசைகளை இந்த இடத்தில் நடத்த வேண்டாம் என.” அவர் குறிப்பிட்டிருந்தார்.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image