Home » மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு 

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு 

Source

அரசாங்கம் முன்வைத்துள்ள மற்றுமொரு சட்டமூலம் எவ்வாறு மக்களின் மனித உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் 44 மற்றும் 45 பிரிவுகளுக்கு அமைய, 
வளாகங்களுக்குள் நுழைவதற்கும், தேடுதலை நடத்துவதற்கும், விசாரணை செய்வதற்கும், தனிநபர்களை விசாரிப்பதற்கும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான தேசிய சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கைனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய கையொப்பமிட்டு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில், அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் உட்பட்வர்களால் உத்தியோகபூர்வ அதிகாரத்துடன் நியமிக்கப்படும் 13 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, ஏனைய 12 உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களின் ஆலோசனையுடன் ஜனாதிபதியினல் நியமிக்கப்படுகின்றனர். 

இந்த நியமனச் செயல்முறையானது, நியமனம் பெற்றவர்களின் சுதந்திரம் போதுமான அளவு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, அமைப்பு மற்றும் நியமன செயல்முறையை மீள்பரிசீலனை செய்ய பரிந்துரைத்துள்ளது. 

சபையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு போதிய பாதுகாப்புகள் இல்லாத நிலையில், இவ்வாறான பரந்த அதிகாரங்களை சபைக்கு வழங்குவது பொருத்தமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சரிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது. 

“அத்தகைய அதிகாரங்களை தன்னிச்சையாக செயல்படுத்துவது, அரசியலமைப்பின் பிரிவு 12 (1) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை உட்பட தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும்.”

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் 44 மற்றும் 45 பிரிவுகளை, மனித உரிமைகள் ஆணைக்குழு மீள்பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதோடு, உள்நுழைதல், தேடுதல்கள் மற்றும் விசாரணைகளை அங்கீகரிக்கும் அதிகாரங்கள் நீதித்துறை மேற்பார்வைக்கு உட்பட்ட அரசியல் ரீதியாக சுயாதீனமான நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கீழ் இலங்கை தனது கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம், 
“மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் அவற்றை நிறைவேற்றுவதற்கான பெறுமதியான சட்ட கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக” சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 செப்டெம்பர் 21 அன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வரைவு தொடர்பாக 5 பொதுவான பரிந்துரைகளையும், 19 பிரிவுகள் தொடர்பான தனது அவதானிப்புகளையும் பரிந்துரைகளையும் தனித்தனியாக வழங்கியுள்ளது.

பொதுவான ஐந்து பரிந்துரைகள்

1. பொருத்தமான தங்குமிடத்தின் தரம், இந்த வரைபின் விதிகளில் மிகவும் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

2. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க, ஊக்குவித்தல் மற்றும் நிறைவேற்றுவதற்காக அரசு நடவடிக்கை எடுக்கையில, பாலினம் மற்றும் வயது உணர்திறன் ஆகியவற்றில் குறிப்பிட்ட அர்ப்பணிப்புடன், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ‘பல்வேறு’ அல்லது ‘இடைப்பிரிவு’ பாகுபாட்டை எதிர்கொள்ளும் யோசனை பரந்த அளவில வரைபில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

3. சட்டமூலத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள அதன் சுயாதீன கண்காணிப்பு பொறிமுறையாக ஆணைக்குழுவின் பாத்திரத்தின் துல்லியமான தன்மை மற்றும் நோக்கம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.

4. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபையின் அமைப்பு, நியமனம் செயல்முறை மற்றும் அதிகாரங்கள் ஆகியவை அரசியலமைப்பில் பொதிந்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அதிக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

5. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபையின் கீழ் உள்ள அமைச்சு, நீதி அமைச்சாக இருக்க வேண்டும். 

19 உறுப்புரைகள்

சட்டமூலத்தின் 19 உறுப்புரைகளை, ஒவ்வொன்றாக எடுத்து, ஆணைக்குழுவால் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் இது தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதிக்கும் பிரதி செய்யப்பட்டு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை ஒன்பதானது ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான சாசனத்தின்  18ஆவது பிரிவின் பல கூறுகளைக் கொண்டிருந்தாலும், ஒருவர் நாட்டை விட்டு வெளியேற அல்லது உள்நுழைவதற்கான சுதந்திரம் உட்பட இயக்க சுதந்திரம் தொடர்பான விடயங்களை 9ஆவது உறுப்புரை குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு வரைபில் அந்த விடயம் வலுப்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

உறுப்புரை 10 ஐ அவதானித்துள்ள ஆணைக்குழு, மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடர்பான அனைத்து விடயங்களிலும், ‘குழந்தைகளின் நலன்களை’ முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் பற்றிய உறுப்புரை 15, பெண்களும் சிறுமிகளும் ‘பல பாகுபாடுகளை’ எதிர்கொள்வதைக் குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆணைக்குழு, அவர்கள் பாலினம் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகிய இரண்டிலும் பாகுபாட்டை எதிர்கொள்வதைக் குறிப்பிடுமாறு பரிந்துரைத்துள்ளது. 

உறுப்புரை 22இன் ஊடாக, மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏனையவர்களுக்கு போன்று தரமான பராமரிப்பை வழங்கும் நோக்கத்துடன் பொது மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தரநிலைகளை நிர்ணயிப்பதற்கும் பயிற்சிகளை வழங்குவதற்கும் அது கடமைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

இவை தவிர, சட்டமூலம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் குறித்தும் ஆணைக்குழு தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

அதற்கமைய, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ‘வாழ்வதற்கான உரிமை’ குறித்த குறிப்பிட்ட விதிகள் வரைபில் சேர்க்கப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.  

மேலும், ஒருவரின் உடல் மற்றும் மன ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் உரிமையை வரைபில் குறிப்பாக சேர்க்க வேண்டும் எனவும்,  மாற்றுத்திறனாளிகளின் தனியுரிமைக்கான உரிமை சட்ட வரைபில் அங்கீகரிக்கப்பட வேண்டும எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முறையாக அடையக்கூடிய தரத்திற்கு ஏற்ப போதுமான வாழ்க்கைத் தரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான உரிமையையும் இந்த வரைபு அங்கீகரிக்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

17 ஜூலை 2023 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அமைச்சு பகிர்ந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு சட்ட வரைபு குறித்து, ஆணைக்குழு தனது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 10 (c) இன் படி, ‘அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டங்களை இயற்றுவதில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் உதவுவதும்…’ என்ற ஆணையை நிறைவேற்ற  நீதி அமைச்சு வழங்கும் ஒத்துழைப்பிற்கு ஆணைக்குழு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image