Home » வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் மௌனம் காக்கின்றது – தேசிய மக்கள் சக்தி

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் மௌனம் காக்கின்றது – தேசிய மக்கள் சக்தி

Source

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் ஊடகச் சந்திப்பின் போதே அதன் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 8 ஆம் திகதி 113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பாகிய நாங்கள் கொண்டாடவிருக்கிறோம்.

இத்தருணத்தில் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாது, மருத்துச் செலவைத் தாங்கிக்கொள்ள முடியாது நெருக்கடியான வாழ்க்கைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக 70 இலட்சம் பேர் அதாவது, இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்தவேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான பிரதான காரணம் 2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியாகும். இந்தப் பொருளாரதார நெருக்கடியின் காரணத்தால் கடந்த இரு வருடங்களில் 15 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இம்மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. விவசாயக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதைப்போல, இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் காணிப்பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, கணவனை இழந்த பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினை, மீனவர்களின் பிரச்சினை போன்றவற்றுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை. இவற்றுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், அரசாங்கமோ கூத்துக்களை காண்பித்து மக்களை திரட்டுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

தற்போது 24 குடும்பங்களுக்கு அஸ்வெசும எனும் பெயரில் நிவாரணம் வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

சமுர்த்தி கொடுப்பனவு பெற்ற 16 இலட்சம் குடும்பங்கள் தற்போது அஸ்வெசும திட்டத்தில் 24 இலட்சமாக அதிகரித்திருக்கின்றது. எனவே, மேலும் 8 இலட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகின்றது.

அதுமட்டுமன்றி, தற்போதைய விலைவாசியுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற 1000 ரூபா சம்பளம் நாளாந்த வாழ்க்கைக்கு போதாமல் இருக்கிறது.

இந்த மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். மலையகத்தில் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். அந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அநீதிக்கு எதிராக போராடுகின்ற மக்களை இந்த அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ஒடுக்கி வருகிறது.

ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது. இதற்கு எதிராக நாங்கள் பெருந்திரளான பெண்களை அணித்திரட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றோம். நாட்டை அழிக்கின்ற இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காக பொதுமக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image