– வெள்ளை முட்டை ரூ.41, சிவப்பு முட்டை ரூ.42
இன்று (ஜூலை 20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.42 ஆகவும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்காச்சோள இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி கோழிப்பண்ணைகளின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனால் முட்டை விலை உயர்வுக்கு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்காச்சோளத்திற்கு மாற்றாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்று தீவனங்கள் பயன்படுத்தப்படுவதால் கோழிகளின் உடல்நலம் மற்றும் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக முட்டை உற்பத்தி 20% முதல் 30% வரை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சில மோசடி வியாபாரிகள் கால்நடை தீவனங்களில் பல்வேறு இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையால் தினசரி முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதுடன், கோழிப்பண்ணை உரிமையாளர்களும் கடுமையான நட்டத்தை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து அரசும் கால்நடை உற்பத்தித் திணைக்கள அதிகாரிகளும் அறிந்திருந்தாலும், இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த கருத்துகளை நேற்று (19) குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
The post இன்று முதல் முட்டை விலை உயர்வு appeared first on LNW Tamil.