இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் சட்டப் பிரிவு தலைவர், சட்டத்தரணி டாக்டர் சானக சேனாநாயக்க, கிரிக்கெட் தொடர்பான புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 121(1)வது பிரிவின் கீழ் விசேட தீர்ப்பொன்றை வழங்குமாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் வாக்குரிமை நீக்கப்படுவதாகவும், சங்கங்களின் வாக்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை மேல் மாகாணத்தில் உள்ள சங்கங்களுக்கு வழங்கப்படுவதாகவும் டாக்டர் சானக சேனாநாயக்க தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், சுயாதீனமாக செயற்பட வேண்டிய நிறுவனத்தின் மீது நிறைவேற்று அதிகாரத்திற்கு அதிகளவிலான கட்டுப்பாடு வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த மனுவின் மூலம் முழு சட்டமூலத்தையும் இரத்து செய்யுமாறு கோரப்படவில்லை. மாறாக, அனைத்து மாகாணங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும், தேவையற்ற அரசியல் தலையீடுகள் இல்லாத வகையிலும் கிரிக்கெட் நிர்வாகக் கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதே மனுவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரும், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
The post இலங்கை கிரிக்கெட் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு appeared first on LNW Tamil.