Home » தனிநாடு கோருவதை குற்றமாகக் கருதக்கூடாது – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் கோரிக்கை

தனிநாடு கோருவதை குற்றமாகக் கருதக்கூடாது – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் கோரிக்கை

Source
பொருளாதாரப் பிரச்சினையாலும், சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி சிங்களத் தரப்பினர், தற்போது வடக்கு= கிழக்கு தமிழ் மக்களை அணுகத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு அணுகும் எந்த தரப்பினரும் தமிழ் மக்களின் பிரச்சனையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதுடன் தனிநாடு கோருவதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் 6ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட 10 விடயங்களில் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்றுக் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள ’ரில்கோ’ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமார், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின், திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.றிபாத், தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.திலான், ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.அசான், ஜெயவர்த்தனபுர, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் இணைப்பாளர் ரி.பி.பிரசாந் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். ‘தமிழ் மக்களின் பிரச்சினை என்பது தனியே எரிவாயு அடுப்பு, மின்சாரம் என்பனவற்றுக்குள் எமது கோரிக்கைகள் உள்ளடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது கூட எமது தமிழ்மக்களின் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. நீங்கள் (வசந்த முதலிகே) ஆறுமாத காலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் தான் இது குறித்து ஆழமாகப் பார்க்கின்றீர்கள். ஆனால் எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுமுள்ளார்கள். போராட்டம் என்பது எமக்குப் புதிதல்ல. பயங்கரவாதத் தடைச் சட்டம் சிங்களவருக்கு எதிராகவும் திசைமாறும் போது தான் சிங்களவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி புரிந்து கொள்வார்கள் என்று அன்று கூறியது இன்று நிச்சயமாகியுள்ளது. எமது பிரச்சினைகளைத் தெற்குக்குக் கொண்டு சென்று இனிவரும் போராட்டங்களின் போது இதனையும் முன்னிலைப்படுத்துகின்ற போது எமது நிலைப்பாடுகள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான உறவுநிலைகளை ஆரோக்கியமாக்கும்’ என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘எமது பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையை தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் புரிதலை ஏற்படுத்தும் செயற்திட்டத்தை வரவேற்கின்றோம். இதே நேரம் முறைமையான கலந்துரையாடல் ஒன்றை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் மேற்கொண்டு,   அதன் பின்னர் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்கின்ற பொழுது அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று . மாணவர்களுக்கூடாகவே நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும்’ என்றும் குறிப்பிட்ட யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிங்கள மாணவர்களின் தெளிவுபடுத்தலுக்காக பின்வரும் விடயங்கள் அடங்கிய முன்மொழிவு ஒன்றையும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரிடம் கையளித்தனர். கையளிக்கப்பட்ட முன்மொழிவில், ‘இன்று பொருளாதாரப் பிரச்சினையாலும், சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி சிங்களத் தரப்பினர், தற்போது வடக்கு =கிழக்கு தமிழ் மக்களை அணுகத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு அணுகும் எந்தத் தரப்பினரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதுடன் பின்வரும் விடயங்களில் தமது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவும் வேண்டும். 1. வடக்கு கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, மதம், கலாசார அடையாளங்களை கொண்ட தனித்துவமான தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. ஒன்றிணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுவழித் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 3. தமிழினம் தன்னாட்சிக்கு உரித்துடைய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 4. தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணயம், தமிழினத்துக்கும் உரித்துடையது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், அதன்வழி தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையும் அவர்களுக்குண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 5. தமிழினம் தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க, சர்வதேசத்தால் நடத்தி கண்காணிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பினுடாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 6. தமிழினத்தின் மீது காலகாலமாக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இனப்டுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினுடாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 7. தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழரின் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 9. சிறிலங்கா அரசியல் அமைப்பின் 6ஆம் திருத்தச் சட்டம் (தனிநாடு கோருவது தண்டனைக்குரிய குற்றம்) நீக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் அரசியல் வெளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 10. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி விடயங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தினாலேயே,   இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வையும் அதன்வழி பொருளாதாரப் பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image