யாழில் அமையவுள்ள மிக உயரமான குடியிருப்புக் கட்டிடம் – Tilko Blue Ocean Holdings – BOI ஒப்பந்தம்
யாழ்ப்பா நகரில் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக Tilko Blue Ocean Holdings நிறுவனம், இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
‘Yarl Royal Palace’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 78 குடியிருப்பு அலகுகள், 13 குடியிருப்பு மாடிகள் மற்றும் 6 வாகன நிறுத்துமிட மாடிகள் அமைக்கப்படவுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க Old Park பழைய பூங்கா வளாகத்திற்கு எதிரே, 107, கண்டி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இது வடக்கு இலங்கையின் உயரமான குடியிருப்புக் கட்டிடமாக உருவாகும் என BOI தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு மாகாணத்தில் உயர்தர குடியிருப்பு கட்டிடத் திட்டங்களுக்கான புதிய தரநிலையை இந்தத் திட்டம் உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திட்டத்திற்கான மொத்த முதலீட்டுத் தொகை, நிர்மாணப் பணிகள் நிறைவடையும் காலக்கெடு அல்லது எதிர்பார்க்கப்படும் நிறைவு திகதி குறித்து BOI வெளியிட்ட அறிக்கையில் தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் தனியார் துறையின் முக்கிய முதலீடாக இந்தத் திட்டத்தை BOI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிர்மாணம், பொறியியல், தொழில்முறை ஆலோசனை, கட்டுமானப் பொருட்கள், போக்குவரத்து மற்றும் விநியோகச் சேவைகள், நிதிச் சேவைகள் மற்றும் சொத்து முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் உலகளாவிய தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் யாழ்ப்பாணத்திற்கு உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பங்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்தின் சொத்து சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
யாழ்ப்பாணத்தின் தொழில் முனைவோர் சமூகம், தொழில்முறை மற்றும் கல்வி அடித்தளம், மேம்பட்டு வரும் உள்கட்டமைப்பு, நகர்ப்புற நில வளங்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்துடனான வலுவான தொடர்புகள் ஆகியவை எதிர்கால தனியார் முதலீடுகளுக்கு சிறந்த அடித்தளத்தை வழங்குவதாக BOI தெரிவித்துள்ளது.
இலங்கையின் பாரம்பரிய சொத்து சந்தையைத் தாண்டி, யாழ்ப்பாணத்தில் இத்தகைய பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படுவது, வடக்கில் பாரிய அளவிலான தனியார் முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதாகவும் BOI குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் பொருளாதார திறன் குறித்து தங்களுக்கு நீண்டகால நம்பிக்கை இருப்பதையும், எதிர்காலத்திலும் அந்தப் பிராந்தியத்தில் முதலீடு செய்வதற்கான தங்களது அர்ப்பணிப்பையும் இந்தத் திட்டம் வெளிப்படுத்துவதாக Tilko Blue Ocean Holdings நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post யாழில் அமையவுள்ள மிக உயரமான குடியிருப்புக் கட்டிடம் – Tilko Blue Ocean Holdings – BOI ஒப்பந்தம் appeared first on LNW Tamil.