Home » 2022ம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது இலங்கையில் இடம்பெறுகின்ற கட்டமைக்கப்பட்ட ஊழலின் பாதக விளைவுகளை வெளிப்படுத்துகிறது!

2022ம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது இலங்கையில் இடம்பெறுகின்ற கட்டமைக்கப்பட்ட ஊழலின் பாதக விளைவுகளை வெளிப்படுத்துகிறது!

Source
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள் இடம்பெறுகின்ற பொதுத் துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. இங்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நிபுணர்களின் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக் கணிப்புக்களையும் பிரதிபலிக்கிறது. உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF), தனியார் இடர் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் உட்பட 13 வெளிவாரியான தரவுகளை பயன்படுத்தியே CPI மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. CPI மதிப்பாய்வானது அதன் புள்ளி வழங்கும் முறையினை 0 தொடக்கம் 100 வரை வடிவமைத்துள்ளது. 100 புள்ளிகள் என்பது ஊழலற்ற தூய்மையான நிலையினையும் 0 புள்ளி என்பது கூடிய ஊழல் நிலையினையும் குறிப்பிடுகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான CPI மதிப்பாய்வில் இலங்கை 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது முன்னைய ஆண்டினை விட ஒரு புள்ளியும் (37) அதற்கு முன்னைய ஆண்டுகளாக 2020 – 2017 மற்றும் 2014ம் ஆண்டுகளை விட இரண்டு (38) புள்ளிகள் குறைவாகும். 2022ம் ஆண்டின் CPI மதிப்பாய்வு புள்ளிகள் அடிப்படையிலான தரவரிசையில் பனாமா, அல்பேனியா, கஸகஸ்தான், செர்பியா, எக்குவடோர், பெரு மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் இலங்கையானது 101ம் இடத்தை பதிவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் CPI மதிப்பாய்வானது ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகவே காணப்பட்ட போதிலும் 2022ம் ஆண்டு இலங்கையானது மிகக் குறைந்த புள்ளியினை (36) பதிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பதிவாகிய 36 புள்ளிகள் இவ்வாண்டும் பதிவு செய்துள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டு பதிவாகிய 40 புள்ளிகளே இலங்கையின் அதிகபட்ச புள்ளியாக விளங்குகிறது. 2022ம் ஆண்டின் CPI மதிப்பாய்வின் நாடுகளின் தரவரிசையில், டென்மார்க் (90), பின்லாந்து (87), நியூசிலாந்து (87) ஆகியன அதிக புள்ளிகளை பதிவு செய்யும் அதேவேளை தென் சூடான் (13), சிரியா (13) மற்றும் சோமாலியா (12) ஆகியன குறைந்த புள்ளிகளுடன் இறுதி நிலைகளில் காணப்படுகின்றன. இலஞ்சம், பொது நிதியின் திசைதிருப்பல், ஊழல் வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதியளவான சட்டக் கட்டமைப்புகள், தகவலை அணுகுவதற்கான வசதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், புலனாய்வாளர்கள் மற்றும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களின் (whistleblowers) சட்ட ரீதியான பாதுகாப்பு போன்ற விடயங்கள் CPI மதிப்பாய்வில் உள்ளடங்கியுள்ளது. ஊழலுக்கெதிரான உலக நாடுகளின் செயல்திறனானது எந்தவித முன்னேற்றமும் இன்றி காணப்படுவதாக CPI மதிப்பாய்வினை மேற்கொள்ளும் ஜேர்மனியில் அமைந்துள்ள உலகளாவிய அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) அமைப்பு குறிப்பிடுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஊழலுக்கெதிரான போராட்டத்தில் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகிறது எனவும் கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் 95 வீதமான நாடுகள் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என உலகளாவிய அமைப்பான TI அமைப்பு குறிப்பிடுகிறது. ஊழலை முறையாக எதிர்கொள்வோம் என நாடுகள் கூறினாலும் ஒருசில நாடுகளே அதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலைமையானது பரவலான ஊழலுக்கு வழிவகுக்கும் அதேவேளை சிவில் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் என TI அமைப்பானது மேலும் குறிப்பிடுகிறது. ஊழலுக்கெதிரான செயற்பாடு, சிவில் சமூக ஒடுக்கு முறைகள், எதிர்பார்க்கும் முறைமை மாற்றத்தினை (System Change) உருவாக்க அரசியல் ரீதியான விருப்பமின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் வாழ்வாதாரம் என்பவற்றில் ஊழல்மிக்கவர்களின் ஆட்சியின் விளைவுகள் என்பன தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமும் தனது தீவிர கரிசனையினை வெளிப்படுத்துகிறது. நாட்டின் கடனைத் தீர்க்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்ற பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்ததை நினைவுகூறுமாறு TISL நிறுவனம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தை (IMF) சார்ந்திருக்கிறது. நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை, பொது நிதி முகாமைத்துவம் மற்றும் வலுவான ஊழலுக்கு எதிரான சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தல் போன்றவற்றினூடாக ஊழலுக்கான சாத்தியக்கூறுகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. நாட்டு மக்களின் அடிப்படை அல்லது அத்தியாவசியமான விடயங்களை உறுதி செய்து நாடு மற்றுமொரு ஸ்தம்பித்த அல்லது மந்தமான நிலையினை அடையாமல் இருக்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், சுற்றுலா மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் பிற வருமானங்களை ஈட்டும் முறைகளை மேம்படுத்தல், கடன் மறுசீரமைப்பு, வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச சமூகத்தின் பிற ஆதரவுகள் என முக்கியமான தேவைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் அதேவேளை இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கம், சட்டக்கட்டமைப்பு மற்றும் பொதுத் துறை மீதான நம்பகத்தன்மையை மீள்நிறுவுதல் என்பன முக்கியமானவையாகும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஊழலுக்கு எதிரான அத்தியாவசிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு TISL நிறுவனமானது அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை வலியுறுத்துகிறது. அவற்றில் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது நிதி தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வையை வலுப்படுத்துதல், ஒரே மாதிரியான சட்டம் மற்றும் திறந்த கொள்முதல் தொடர்பான தளமொன்றினூடாக பொதுக் கொள்முதலின் வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், பொதுத் துறையில் அரசியல் தலையீட்டை நீக்குதல், அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களின் கணக்குகளை கணக்காய்வு மற்றும் மீளாய்வு செய்தல் மற்றும் சட்ட அமுலாக்க அதிகார சபைகளை வலுப்படுத்தல் என்பன அவசியமாக மற்றும் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் என TISL நிறுவனமானது மீண்டும் வலியுறுத்துகிறது. அரசாங்கமும் பாராளுமன்றமும் இந்த விடயங்களை வார்த்தைகள் ஊடாக நிறைவேற்றுவதை விட செயலினூடாக நிறைவேற்றுவதே மக்களின் நம்பிக்கையினை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது. ஓர் முறைமை (System Change) மாற்றத்திற்கு இன்றியமையாத கலாசார மாற்றத்தினை உருவாக்க அனைத்து இலங்கையர்களுக்கும் TISL நிறுவனமானது அழைப்பு விடுகிறது. உங்களது பணியிடங்கள் மற்றும் வணிகங்களில் ஊழலுக்கு எதிரான கொள்கையினை கடைபிடிப்பதுடன் குடி உரிமை மற்றும் பொறுப்புக்களை நிலைநிறுத்துதல், பங்கேற்புடனான ஆட்சி, முக்கிய சட்ட சீர்திருத்தங்களை கோருதல் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் சரியாகவும் முறையாகவும் வாக்களித்தல் என்பன நாட்டின் பிரஜைகளுக்கு TISL நிறுவனத்தினால் விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளாகும். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலம் ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச ரீதியாக செயற்படும் உலகளாவிய அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) உலகளாவிய அமைப்பின் உள்நாட்டு அமைப்பாகும். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு இவ் CPI வருடாந்த ஆய்வுக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) உலகளாவிய அமைப்பினால் திரட்டப்பட்ட இலங்கை தொடர்பிலான தரவுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்திற்கு வெளியே பெறப்பட்டவையாகும். Full Corruption Perceptions Index 2022: www.transparency.org/en/cpi/2022 N.S
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image