உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை நேற்று (2) ஆரம்பித்து வைத்தன.
இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர காலத்தில் 7% பொருளாதார வளர்ச்சியை எட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது பங்களிக்கவுள்ளது.
தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மை, பலப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை மற்றும் வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நடுத்தர காலத்தில் 7% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே எமது இலக்காகும். உலக வங்கி கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் பயணித்துள்ளது
இந்த புதிய ஒப்பந்தம் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும், என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினூடாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இந்த புதிய கூட்டாண்மையின் மையமாக தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காணப்படுகிறது.
அடுத்த தசாப்தத்தில் சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தகுதியான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய தனியார் முதலீடுகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நேரடி மற்றும் திரட்டப்பட்ட முதலீடுகள் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) வழங்கவுள்ளது.
அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் வரையிலான குறைந்த வட்டி கடன் வசதியை உலக வங்கி வழங்கவுள்ளது.
அரச ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலராக உயர்த்த இந்த கூட்டாண்மை ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் 2030க்குள் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறுதல். இதன் மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மூலோபாயத் திட்டம் 2026-2030 க்கு ஆதரவளித்தல் மற்றும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரத்யேக முதலீடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
2025 நவம்பரில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எதிர்கால அனர்த்தங்களின் போது விரைவாக மீண்டெழவும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்படும்.
இந்தக் கட்டமைப்பின் கீழ் முதல் முக்கிய திட்டமாக REVIVE (Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் டொலர் முதலீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் இத்திட்டம் யாழ்ப்பாணம், பாசிக்குடா, திருகோணமலை மற்றும் அருகம்பே ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டது.
இத்திட்டம் 2031 ஆம் ஆண்டளவில் 3,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையுடன் பணியாற்றி வருவதுடன், தற்போது கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 13 செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து appeared first on LNW Tamil.