Home » MUKAVARI 2022-01-22 16:04:15

MUKAVARI 2022-01-22 16:04:15

Source

 கோட்டபாயவின் புதிய அரசியலமைப்பும்,                இல்லாமலாகப் போகும் தமிழர் இருப்பும்!  

------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி


1994 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை. எனவே இந்த விடயம் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து விரிவான முறையில் மக்களின் கருத்தைப் பெற்று மக்கள் சார்பான அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பித்து இருப்பதாக அக்கொள்கைப் பிரகடன அறிக்கையில் கோட்டபாய குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய வம்ச ஆட்சியை வைத்திருப்பதற்காக இந்த அரசியல் யாப்பு மாற்றத்தினைக் கொண்டு வருவதாக இருந்தாலும் அவரது வியாக்கியானங்கள் மூலம் உள்சூழ்ச்சியை மூடி மறைத்து தார்மீக நெறிமுறைக்குட்பட்ட செயலாக வர்ணித்து உரையாற்றியுள்ளார். 

தேசிய இனப்பிரச்சனை இருப்பதை இவர் தன்னுடைய உரையில் தெளிவாக மறுதலிக்கிறார். கூட 2019 கார்த்திகை மாதம் சனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கோட்டபாய இதுவரை தமிழ் தலைமைகளுடனோ அல்லது தமிழர்கள் பிரச்சனை தொடர்பாகவோ
எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடத்தவில்லை. நாட்டில் நடைபெறும் பிரச்சைனைகள் யாவையுமே பொருளாதாரப் பிரச்சனையாக மட்டுமே அவர் உரையில் வெளிப்படுத்துகின்றார். மக்களுக்கு குடிநீர் , நீர்பாசனம், வீடுகள், நெடுஞ்சாலைகள் ஆகிய வசதிகளை வழங்குவதே நல்லிணக்கத்திற்கு அடிப்படை அதுவே தனது அரசாங்கத்தின் நல்லிணக்கக் கொள்கை என்று எடுத்தியம்புகிறார். 

வடக்கு கிழக்கிலே தனது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அபிவிருத்தி செயல் திட்டங்களுக்கு, அப்பிரதேசத்திலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வெளியிட்டவர் தமிழர்கள் பிரச்சனைக்கான தீர்வு பற்றியோ 13ஆந் திருத்தச் சட்டம் பற்றியோ அல்லது அதிகாரப்பரவலாக்கல் பற்றியோ மூச்சுவிடவில்லை. 

2009 முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு, மீள்குடியேற்றம், நிவாரணப் பணிகள்  என்பன பற்றி வாய் வாக்குறுதிகளைப் பேசிவரும் சிங்கள அரசுகள் தமிழர் பகுதிகளைத் தொடர்ந்து சிங்கள பௌத்த மயமாக்குவதி திட்டமிட்ட வகையில் அரங்கேற்றியே வருகின்றன. தமது தனித்துவமான தலைமையை இழந்த தமிழினம் அரசியல் அநாதைகளாக நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்ட்டுவிட்டது. தார்மீக நெறிமுறைக்குட்பட்ட அரசியல் செய்வதாகக் காட்டிக் கொண்டே சர்வதேச நாடுகள் ராச தந்திர அரசியலையே செய்கின்றன. தமிழர்களின் பிரச்சனைகளை தர்மத்தின் அடிப்படையிலோ, கருணையின் அடிப்படையிலோ பார்ப்பது கிடையாது. இவர்களது இந்த ஏமாற்றும் அரசியலில் நியாயமான தீர்ப்புக் கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பினால் இலவுகாத்த கிளிகளின் நிலைதான் ஈழத்தமிழர்களின் கதையாகும்.    

 ஒற்றையாட்சி அமைப்பையே வலியுறுத்திவரும் கோட்டபாயவின் “ஒரே நாடு, ஒரே சட்டம்”  மத்திய அரசாங்கத்தை தவிர்ந்த வேறு எந்தவொரு சட்டவாக்க அமைப்பும் நாட்டில் இருப்பதைத் தடுப்பது அல்லது ஒழிப்பதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை தடுக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கொள்கையுடன் உறுதிபட நகரும் கோட்டபாய புதிய அரசியலமைப்பிற்கான ஆதரவைச் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பெற்று வெற்றிகொள்வதற்கு அதாவது எதிர்க்கட்சிகளினுடைய எதிர்ப்பைத் தாண்டி அவர்களையும் ஆதரவாக வாக்களிக்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இந்த புதிய அரசியலமைப்பினுள் ‘தமிழ் மக்களைக் கோட்பாட்டு ரீதியாகத் தோற்கடிக்கக் கூடிய விடயங்கள் உள்ளடக்கப்படும்.’ தமிழர்களும், இசுலாமியர்களும் அவர்கள் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை பாதுகாப்பதை தடுத்துநிறுத்திவிடும்.  தேசிய இனங்கள் தங்கள் தனித்துவ அடையாளங்களும், உரிமைகளும் உத்தரவாதம் அற்றநிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.   

2009 இல் தமிழ் மக்களினுடைய போர்தான் தோற்கடிக்கப்பட்டது ஆனால் தமிழ் மக்களுடைய போராட்டக் கோட்பாடு தோற்கடிக்கப்பட்டால் அன்றி தமிழ் மக்களினுடைய இருப்பை இல்லாமல் ஆக்கமுடியாது. தமிழ் மக்களினுடைய இருப்பை இல்லாது ஆக்குவதற்கான விடயத்தை அரசியல் யாப்பின் மூலமாக கொண்டு வரப்போகிறது ராசபக்சக்களின் அரசு. இதனையே ராசபக்சக்கள் ஆயத யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு விட்டது, தற்பொழுது சித்தாந்த யுத்தம் நடக்கின்றது என்று அன்றே   கூறியதையும் நினைவில் கொள்க. இன்று சித்தாந்த யுத்தத்தின் வெற்றியை நோக்கி அவர்கள் தந்திரமாகச் செயற்படுகிறார்கள். இருப்பினும் தமிழ் மக்களை நிரந்தரமாகத் தோற்கடிக்கப் போகின்றோம் எனும் மந்திரத்தின் மூலம் இந்த அரசியலமைப்பை உருவாக்க முற்படும் முயற்சியில் தோல்வி ஏற்படுமேயாயின் ஒரு ஆட்சி மாற்றம் நிகழும். அந்த ஆட்சிமாற்றமும் கூட சிங்கள மக்களைக் கவர்ந்துதான் அதனை உருவாக்கமுடியும். இதுவும் தமிழர்களுக்குப் பாதகமானதே. 

இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருக்கப்போவது சர்வதேசத்தில் சக்திமிக்க நாடுகள். அவர்கள் தங்களுக்கு ஆதரவானவர்களை (பொம்மை ஆட்சியாளர்கள்) கொண்டுவருவார்களேயாயின் தமிழர்கள் பாதுகாப்பு நிச்சயம் பாதிக்கப்படும். தமிழர்களுக்காக பேசுவதற்கோ அல்லது குரல் கொடுப்பதற்கோ சர்வதேசம் தயராக இல்லாமல் இருக்கும் ஏனெனில் இலங்கையின் ஆட்சிமாற்ற ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் கைப்பொம்மைகள். இந்தப் பொம்மை ஆட்சியாளர்கள் சர்வதேசத்தினால் கொண்டுவரப்படப் போகின்றவர்கள், சர்வதேசத்திற்கு ஆதரவானவர்கள் எனவே இந்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிராக எந்தநடவடிக்கை எடுத்தாலும் சர்வதேசம் தமிழர்களுக்காக சர்வதேசம் கதைக்க வரப்போவது கிடையாது. ஆகவே ஆட்சிமாற்றம் ஒன்று மேற்குலகின் மூலம் ஏற்படுத்தப்படுமேயாயின் தமிழர்கள் நாம் பாதிப்பிற்கு உள்ளாவோம். 

இதையும் தாண்டி இன்னுமொரு விடயத்திலும் தமிழர்கள் நாம் விழிப்பாக  இருக்கவேண்டும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பம் ஒன்றும் உள்ளது. இவ்வாறு ஒரு புதிய உடன்படிக்கை ஒன்று நிகழ்ந்தால் தமிழர் தரப்பு வெளியே தள்ளப்பட்டு தமிழர்கள் பிரச்சனை பேசப்படமுடியாத ஒரு விவகாரம் ஆகிவிடும். தமிழர்களுடைய அரசியலை அழிப்பதற்கான அடிப்படையைக் கொண்டதாகவே அந்த ஒப்பந்தம் இருக்கும்.

பிரிக்கபட்டு பாக்குநீரிணையின் இருகரையும் இருக்கும் தமிழ் இனம் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் மிக்க கடற்பரப்பைக் தம்தாயகக்கரையாகக் கொண்டுள்ளன. இத்தகைய தமிழரின் இருப்பை இல்லாமலாக்க எடுக்கப்படும் முயற்சியை தடுப்பதற்கு தமிழர்கள் நாமும் நெறிமுறைக்கு கட்டுப்படும் தார்மீக அரசியலை பேச்சளவில் வைத்துக் கொண்டு ராசதந்திர அரசியல் செய்வதே சாணக்கியம். எதிர்ப்பு அரசியல் செய்வதோ, இரந்து கோரி அரசியல் செய்வதனாலோ இவற்றைத் தடுக்கமுடியாது. எனவே இக்களச் சூழ்நிலையை ராசதந்திர ரீதியில் கையாளவேண்டும். 

கோட்டாவின் புதிய அரசியல் யாப்பு வெற்றிபெற்றால் தோல்வியடையப்போவது தமிழர்கள் நாங்கள் மட்டுமல்ல இந்தியாவிற்கும், மேற்குலகத்திற்கும் பெருந்தோல்வியே. இந்த இரண்டு தரப்பினுடைய தோல்வியைத்தான் தமிழர்கள் நாம் சரிவரக் கையாளவேண்டும். 

தமிழ் சிங்கள மக்களிடையே இனமுரண்பாடு இருக்கவேண்டும் என்பதே மேற்குலகின் முடிவு. இதன் அடிப்படையில்தான் பிரித்தானியா சுதந்திரம் என்று கொடுத்தபொழுதே இம்முரண்பாடுகளுடனேயே பெயரளவு சுதந்திரத்தை வழங்கி இலங்கையை நவகாலனித்துவத்திற்கு மாற்றியது. இவ்வாறு வெற்றிகரமாக தமது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டின் அவசியம் குறித்த இன்னொரு காரணம் இந்தியா குறித்த மேற்குலகப் பார்வை. இந்தியாவினுடைய கையில் இலங்கை போய்விடக்கூடாது என்பதற்கும், இலங்கை இந்தியாவிற்கான ஆதரவு நிலமாகவோ மாறிவிடக்கூடாது என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. 

உலக கடற்போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நிலப்பரப்பில் உள்ள அரசாங்கத்தைக் கையாளும் திறவுகோல் மேற்குலகின் கையில் இருக்கவேண்டும் என்பதும் இதன் முக்கிய நோக்கம். இருப்பினும் இலங்கையைக் கட்டுப்படுத்த இந்த இனமுரண்பாட்டைக் கையாளவேண்டிய தேவை இந்தியாவிற்கும் உருவாகிவிட்டது. இந்தியாவும் மேற்குலகும் எவ்வளவுதான் இன்றைய சந்தர்ப்பத்தில் நட்பு நாடுகாளாக விளங்கினாலும் திரைமறையில் இவர்களுக்குள் ஒரு பனிப்போர் நடந்த வண்ணமே உள்ளது.  

இலங்கையைக் கையாள்வதற்கு   இந்தியாவிற்கு இந்தப் பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் தற்பொழுது தேவைப்படுகிறது.  அதேவேளை தமிழர் தரப்பிற்கும் அரசியல் யாப்பைத் தடுப்பதற்கு இந்தியாவை இழுத்து உள்ளே விடுவதைத் தவிர வேறுவழியில்லை. 13 இல் தீர்வு இருக்கிறதா என்பதல்ல விடயம் ஒரு ராசதந்திர நோக்கோடு இதை உற்று நோக்கவேண்டும். இந்தியா தமிழர்களையும் உள்ளடக்கி இலங்கையுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவேண்டும்.  முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லி இந்தியாவிடம் கொடுக்கின்ற கோரிக்கை மேற்குலகத்திடமும் கொடுத்து, சர்வதேசத்திடமும் கொடுக்கப்படவேண்டும். 

குப்பையில் போடப்படவேண்டிய 13ஆந் திருத்தச்சட்டத்தை வைத்தே குழப்பங்களுக்கு வித்திடுவது தமிழர் அரசியல் ஆட்டத்தில் ஓரங்கமாகட்டும். 13ஆந் திருத்தச் சட்டம் பற்றியோ அல்லது அதிகாரப்பரவலாக்கல் பற்றியோ மூச்சுவிடாத சனாதிபதி ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆளுந்தரப்பு அமைச்சர் உதய கம்மபில இந்தியாவுடன் பேசிப்பயனில்லை சிறீலங்கா அரசாங்கத்துடனேயே பேசவேண்டும் என்று தமிழர்களை அழைக்கிறார்.

கதவு திறக்கிறது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர் தரப்பு இலங்கையுடனும் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைக்கவேண்டும். கருவியாகப் பாவிக்கப்படும் விளையாட்டுப் பொம்மைகளாக இல்லாமல் களம் இறங்கி ஆடுவதன் மூலமே தமிழர் நாம் நம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. பதின்மூன்றாந் திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாலோ ஆதரிப்பதாலோ தீர்வு எதுவம் கிடைத்துவிடப்போவதில்லை. மாறாக இது ஒரு திருப்பு முனைக்கான முன்முயற்சியாக பரிணமிக்கட்டும்.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image