Home » MUKAVARI 2022-03-18 00:21:40

MUKAVARI 2022-03-18 00:21:40

Source

 அதர்மத்தின் ஆட்டமும்,                               அகதிகள் ஓட்டமும்! 
 ---------------------------முகுந்தமுரளி


அமெரிக்க-மேற்குலகநாடுகள் ஜனநாயகத்தின் காவலராக யுக்ரைன் அதிபரை வர்ணித்து கதாநாயகராகவும் புடினை சர்வாதிகாரி வில்லனாகவும் சித்தரித்து தங்களது ஒரு தலைப்பட்சமான பிரச்சாரத்தை மட்டும் உலகம் நம்பவேண்டும் என்று செயற்பட்டு வருகின்றன. உண்மையில் அமெரிக்கா நினைத்தால் இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். தன்னுடைய வல்லாதிக்கம் மற்றும் பொருளாதார நலன்களுக்காக அமெரிக்காவிற்கு இந்த யுத்தம் மிக அவசியமானதாக இருக்கிறது. புவிசார் அரசியலை அதன் நட்பு- பகை நிலைமைகளை புரட்டிப் போடுமளவிற்கு விளாடிமிர் புடினின் யுக்ரைன் மீதான உறுதிமிக்க யுத்தம் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 

இன்றைய சூழ்நிலையானது வரலாற்றில் தொடர்ந்து ஒரு சுதந்திர யுக்ரைன் இருக்கக்கூடிய ஒரு சமாதான உடன்படிக்கையை கற்பனை செய்வதைக்கூட  கடினமாக்குகிறது. ஏனெனில் யுக்ரைனை பெரிய ரஷ்யாவின் இயற்கையான பகுதியாக புடின் கருதுகிறார். யுக்ரைனைக் கட்டுப்படுத்த, யுக்ரைனை விட மிகப்பெரிய இராணுவத்தை அவர் கைவசம் வைத்திருக்கிறார். செச்சினியா மற்றும் சிரியாவில் தனது நோக்கங்களை அடைய ஏராளமான பொதுமக்களின் இழப்பைக் சுட கவனத்தில் கொள்ள மாட்டார் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். யுக்ரைனில், புடின் உலகின் பிற பகுதிகளை விட தனக்கு முக்கியமான ஒரு இடத்தில் ஒரு கொடுமையான போரை நடத்துவதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் செலவிட தயாராக இருப்பதனை அறியக்கூடியதாகவிருக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த புடின் மீளவும் சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்பும் கனவுடனே இருந்து வருகிறார் என்பது குற்றச்சாட்டு. ஆனால்  அவர் ரஷ்யாவை இழப்பதற்குத் தயாராக இல்லை என்பதேயே யுக்ரைன் மீதான யுத்தம் எடுத்தியம்புகிறது. அவர் யுக்ரைனுக்குள் நேட்டோவின் கைநீளுவதையும், நேட்டோவுடன் யுக்ரைனை இணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் மிகநிதானமாக அவதானித்து துல்லியமாக காலங்கணித்து யுத்தத்தினால் ஏற்படப்போகும் பெருஞ்செலவுகளையும் கணித்து முழு யுக்ரைனையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் காய்நகர்த்துவது கண்ணுக்குப் புலனாகிறது. இதுவே ரஷ்யாவிற்கு பாதுகாப்பை வழங்கும் என புடின் நம்புகிறார். 

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா மற்றும் யுக்ரைனின் மற்ற கூட்டாளிகள் புட்டின் மீது சுமத்த முயற்சிப்பதும்; புடினைத் பொருளாதார ரீதியாக வீழ்த்தி அவரது கனவுகளை நிர்மூலமாக்குவது அல்லது புடினின் கதையையே முடித்துவிடும் இலக்கில் நகர்கிறார்கள். 

புடினைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த போர் தொடங்கி 12 நாட்களுக்குள் ரஷ்யா யுக்ரைன் மீது தொடுத்துள்ள போருடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல் புடின் தனது இரண்டு தசாப்த கால அதிகாரத்தில் உலகில் ஒரு அழிவு சக்தியாக இருந்துள்ளார். அவர் கிரிமியன் தீபகற்பத்தை இணைத்து செச்சினியா மற்றும் சிரியாவை துஷ்பிரயோகம் செய்தார். அவர் தனது சக்தியைப் பயன்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவரது ஆட்சி ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை படுகொலை செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த புடின் தவறான தகவல்களைப் பயன்படுத்தினார் என்றும் சட்டவிரோத நாணயநடவடிக்கை எனப் பல காரணங்கள் காட்டி பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் புடின் அதிகாரத்தில் இருந்து தள்ளப்படுவதை பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை. யுக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வரவோ - மற்றும் யுக்ரைனை ஒரு தேசமாக வாழ அனுமதிக்கவோ ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் தேவையில்லை. மேலும் புடினை வெளியேற்றுவதே மேற்குலகின் இலக்காக இருந்தால், வெற்றிக்கான வாய்ப்புகள் இன்னும் சிறியதாகிவிடும்.

“புடின் மறைந்தால் மட்டுமே இது முடிவுக்கு வரும்" என்று ரஷ்யாவின் நிபுணரும் வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியுமான பியோனா ஹில் குறிப்பிட்டதாக நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. “ரஷ்யா எப்போதும் முற்றுகைக்கு உள்ளாகிறது, அதன் தலைவர்கள் எப்போதும் முற்றுகைக்கு உள்ளாகிறார்கள், மக்கள் எப்போதும் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றதொரு மனநிலையை இது ஊட்டுகிறது."

மேற்குலகம்; விதித்த ரஷ்யா மீதான பொருளாதாரத்தடைகள் பொதுமக்களின் அதிருப்தியைத் தூண்டும் திறன் கொண்டன, இதுவரை விதிக்கப்பட்டவற்றில் மிகவும் ஆக்ரோஷமானவை. ரஷ்ய வங்கிகளுக்கு கடன் கொடுப்பதில் சிரமம் இருக்கும். சில பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்ய ரஷ்ய நிறுவனங்கள் போராடும். ரஷ்ய நுகர்வோர் இனி Master card அல்லது Visa card ஐப் பயன்படுத்த முடியாது, கோக் அல்லது பெப்சி வாங்க முடியாது மற்றும் McDonald's, Starbucks அல்லது Uniqloஇல் ஷாப்பிங் செய்ய முடியாது. ரூபிள் மதிப்பு வீழ்ச்சியடைந்து, பல பொருட்களின் விலையை உயர்த்தியது. 

மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் யுக்ரைனுக்கு படைகளை அனுப்ப விரும்பவில்லை. ஒரு பகுதியாக, மேற்கத்திய தலைவர்கள் ஒரு பெரிய போரை, ஒரு அணுசக்தி யுத்தத்தை கூட தொடங்குவது பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் தங்கள் பகுதியில் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளவே பெரும்பாலும் விரும்புகின்றனர். 

அமெரிக்காவும், கனடாவும் பிற நாடுகளும் ஏற்கனவே ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பியுள்ளன. யுக்ரைனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாய் கனடாப் பாராளுமன்றிலும், அமெரிக்க காங்கிரஸிலும் காணொளி மூலம் பேசியுள்ளார். 

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மற்றும் யுக்ரேனுக்கான ஆயுத உதவி ஆகிய இரண்டையும் தலைவர்கள் விவாதிக்கும் வாய்ப்புள்ள பிரஸ்சல்ஸில் அடுத்த வாரம் நேட்டோ கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கலந்து கொள்வார் என்று வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. யுக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அறிவிக்கவும் பைடன் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது. 

சில சமாதான உடன்படிக்கைகள் யுக்ரைனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம் இருப்பினும் யுக்ரைன் அதிபர் நேட்டோவில் சேரும் நோக்கம் தமக்கில்லை என்று அறிவித்தும், மறுபுறம் ரஷ்யப் படைகளைத் தாம் அழித்துக் கொண்டிருப்பதாக செய்திகளை வெளியிட்டும் வருகின்ற அதேவேளை ரஷ்யாவைப் போல் தாமும் குற்றம்மிகுந்த எதிர்த்தாக்குதலை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.  டைம்ஸ் கட்டுரையாளரான தாமஸ் ப்ரைட்மேன், பல ஆண்டுகளாக சண்டை நடந்து வரும் கிழக்கு யுக்ரைனின் ஒரு பகுதியை ரஷ்யா கையகப்படுத்தும் சாத்தியமான ஒப்பந்தத்தின் வரையறைகளை வகுத்துள்ளார். யுக்ரைன் நேட்டோவில் சேரமாட்டேன் என்று உறுதியளிக்கிறது (ஜெலென்ஸ்கி ஏற்கனவே குறிப்பிட்டது போல); மற்றும் ரஷ்யா தான் செய்த சேதத்திற்கு இழப்பீடு கொடுக்கிறது.

ஆனால் இவற்றில் எதுவுமே இப்போது சாத்தியமாகத் தெரியவில்லை. ரஷ்யா, யுக்ரைனின் பலபகுதிகளில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது, ஆகாயப்படையை பாவிக்காவிட்டாலும் மாற்றாக கில்லர் ரோன்களைப் பாவித்தும் தாக்கத் தொடங்கிவிட்டது.  மேலும் தெற்கு உக்ரைனில் கிரிமியாவின் எல்லையில் உள்ள கெர்சன் பகுதி முழுவதையும் இப்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறுகிறது. 

ஒருநாள் இல்லை ஒருநாள் யுக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்க்கப்படும் என்ற வாக்குறுதி 2008இல் நேட்டோ கூட்டமைப்பினால் கூறப்பட்டமையே இந்த யுத்தத்திற்கான ஆரம்பப்புள்ளியாகிறது.  2008 இல் இருந்து 2022 வரை நேட்டோ படை யுக்ரைனிற்குள் ஊடுருவிகிறது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. புவிசார் அரசியல் ஆதிக்கப்போட்டியில் அலைக் கழிக்கப்பட்டு உருக்குலைந்து போவது யுக்ரைன் மக்களே என்றால் மிகையாகாது. ஜனநாயகம் என்பது பெயரளவில் மட்டுமே மதிப்புப்பெறுகிறது. உண்மையில் ஜனநாயகம் அதைப்பாதுகாக்கச் சட்டம் போட்டு வைத்திருப்பர்களாலேயே மறைமுகமாக அழிக்கப்படுகிறது. அமைதியையும், சமாதானத்தையும் பேணுகின்றவர்கள் ஆயுத உற்பத்தியில் முன்னோடிகளாக தாங்கள் உற்பத்தி செய்த ஆயுதத்தின் பயன்பாடுகளை விளம்பரப்படுத்த யுத்தகளங்கள் தேவைப்படுகின்றன. அங்கே மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்றழிக்கப்படுகின்றனர். 

“ரஷ்யா உக்ரேனில் ஒரு முழுமையான தோல்வியை நோக்கி செல்கிறது," என பிரான்சிஸ் ஃபுகுயாமா அமெரிக்க நோக்கத்தில் எழுதுகிறார். உண்மைநிலை உலகம் அறியாவண்ணம் ஒருபக்கச் செய்திகளினால் மூடி மறைக்கப்படுகிறது. யுக்ரைன் மக்கள் யுத்தத்தின் கோரப்பிடியில் தப்பி உயிர் வாழ்வதற்காக அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தர்மநெறியற்ற அதர்ம ஆட்சியாளர்கள் யாரையும் பற்றிக் கவலைகொள்ளாமல் தங்கள் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இறங்கி வந்த எண்ணெய்விலை மீண்டும் ஏறி உச்சத்தில் பரம பதம் ஆடுகின்றது. நாளை என்னவாகும் எனும் அச்சத்தில் உலக மக்கள் அச்சத்தில் வாடுகின்றனர். 


Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image