Home » 2024 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3வீதமாக அமையும் ; ரணில் நம்பிக்கை

2024 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3வீதமாக அமையும் ; ரணில் நம்பிக்கை

Source

சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே தாம் மேற்கொண்டிருப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் புதிய விமானப் படைத் தலைமையகக் கட்டிடத்தை இன்று (01) திறந்துவைத்து உரையாற்றும்போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க,

“இன்று நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். நான் அதிபராக நாட்டைப் பொறுப்பேற்ற போது, நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்திருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு என்னிட்டம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு அரசியல் செய்வதா? இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்காக பணியாற்றுவதா? என நேரடியாக அமைச்சரவையுடன் ஆலோசிக்க நேர்ந்தது.

பொருளாதார வேலைத்திட்டத்தை இரு வருடங்கள் காலம் தாழ்த்தியதால் லெபனான் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டது. அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினால் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 13 வருடங்கள் திண்டாடியது.

வைப்பாளர்களின் பணத்தை பாதுகாக்க இலங்கை வங்கிகள் சங்கத்தின் வேலைத்திட்டம்
வைப்பாளர்களின் பணத்தை பாதுகாக்க இலங்கை வங்கிகள் சங்கத்தின் வேலைத்திட்டம்

அவர்கள், அரச ஊழியர்களின் சம்பளத்தை 50% சதவீதமாக குறைக்க நேர்ந்தது. இருப்பினும் நாம் அந்த நிலைமைக்கு செல்லவில்லை. சரிவடைந்து கிடந்த எமது மொத்த தேசிய உற்பத்தி எமது நேரடி தீர்மானங்களின் பலனாக முன்னேற்றம் கண்டது. 2023 ஆண்டு இறுதியில் ஓரளவு வலுவான பொருளாதார நிலைமை உருவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை, சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இவ்வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% ஆக அமையும் என நம்புகிறேன். பின்னர் அதனை மிஞ்சிய வளர்ச்சி ஏற்படும். எமக்கு ஒத்துழைப்பு வழங்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.

எதிர்காலத்தில் இந்தக் கடன்களை செலுத்தும் இயலுமை எம்மிடம் உள்ளதா என்பதே அவர்களின் கேள்வியாகவுள்ளது. அதனால் நாம் புதிய வருமான வழிமுறைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.

நாம் கடந்த வருடத்தில் 3.1 ட்ரில்லியன்களை வருமானமாக ஈட்டினோம். அது எமது மொத்த தேசிய உற்பத்தியில் 12% ஆகும். 2026 ஆம் ஆண்டளவில் 15% ஆக மொத்த தேசிய உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். 2024 ஆம் ஆண்டில் 4.2 ட்ரில்லியன்களை வருமானமாக ஈட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்காகவே வற் வரி மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல் தசம் 8 (0.8) அளவிளான தன்னிறைவை எதிர்பார்க்கிறோம். இருப்பினும் 2025 வரையில் அதனை 2.3 ஆக தக்கவைக்க வேண்டியதும் அவசியம். அந்த இலக்குகளுடனேயே முன்னோக்கிச் செல்ல வேண்டும். இது கடினமான இலக்கு. கஷ்டங்கள் உள்ளன. அது தொடர்பில் பல முறை சிந்தித்துள்ளேன்.

இந்தத் தீர்மானங்களை மேற்கொள்ள தவறினால் முன்னைய பொருளாதார நிலைமையை நாம் மீண்டும் சந்திக்க நேரிடும். இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பட்சத்தில் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். அதனால் நாட்டின் நலனுக்காக இந்த தீர்மானங்களை எடுத்தோம்.

பிரபலமாவதற்காக நான் அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டை கட்டியெழுப்பி, உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே எனது நோக்கமாகும். அதனால் கடினமாக இருந்தாலும் சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் அது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளேன்.

அதேபோல் வரி சேகரிப்பில் பல்வேறு குறைப்பாடுகள் உள்ளன. அதற்காக புதிய வருமான அதிகார சபையொன்றை உருவாக்க சர்வதேச நாணய நிதியம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அதனால் 2025 – 2026 ஆகும் போது பொருளாதார வளர்ச்சியை 5% ஆக மேம்படுத்த முடியும். இருப்பினும் அது போதுமானதல்ல. எதிர்கால சந்ததிக்காக 8%-9% வரையிலான இலக்கை அடைய வேண்டும்.

அந்த வளர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பிலேயே ஆராய்ந்து வருகிறோம். எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான கடிமான தீமானங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு உள்ளாகினாலும் நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே நாம் எடுத்துள்ளோம்.

நாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்களை உணர்ந்து மற்றைய அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். அனைவரும் ஒன்றுபடும் பட்சத்தில் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டிற்குள் மிகத் துரிதமான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.” என்று தெரிவித்த அதிபர், இந்த வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image