மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக, இந்த மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளதாக சர்வதேச நிதி ஊடகமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது. இதனால் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளமை,
நீண்டகாலமாக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், வெளிநாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளமை,
உலகளாவிய சந்தையில் அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவது இலங்கை ரூபாய்க்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை,
இறக்குமதிச் செலவினங்களுக்காக சந்தையில் டாலருக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளமை போன்ற காரணங்களினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் இந்த தொடர் சரிவு காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு இது நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், இந்த வீழ்ச்சி தற்காலிகமானது மட்டுமே என்றும் நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் விரைவான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் வரும் மாதங்களில் அந்நியச்செலாவணி இருப்பு உயர்ந்து, இலங்கை ரூபாய் மீண்டும் வலுவான நிலையை அடையும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்! appeared first on LNW Tamil.