இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரிகளில் தற்காலிகமாக 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த நடவடிக்கை மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச் சட்டத்தின் பிரிவு 10A இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, பொதுவான மற்றும் சலுகை அடிப்படையிலான இறக்குமதி வரிகளுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் கீழ்க்கண்ட பல்வேறு வாகனங்களுக்கு பொருந்தும்:
- பயணிகள் போக்குவரத்து வாகனங்கள்
- மோட்டார் கார்கள்
- ஸ்டேஷன் வேகன்கள்
- பந்தய கார்கள்
- ஆம்புலன்ஸ்கள்
- சிறை கைதி போக்குவரத்து வாகனங்கள்
- இறுதிச்சடங்கு வாகனங்கள்
- மோட்டார் ஹோம்கள்
- கோல்ஃப் கார்கள்
மேலும், பல்வேறு இன்ஜின் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களைக் கொண்ட வாகனங்களும் இந்த வரி உயர்விற்குள் அடங்கும்.
ஆனால், 2026 மே 15 ஆம் திகதிக்குள் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் (L/C) அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த புதிய கூடுதல் கட்டணம் பொருந்தாது.
இந்த உத்தரவு நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
The post வாகன இறக்குமதி வரி 50% உயர்வு appeared first on LNW Tamil.